அம்மா குடிநீர்: "அரசு, குடிநீர் விற்பனையில் ஈடுபடுவது சரியல்ல"
Share
Subscribe
தமிழக அரசு நேற்று அம்மா குடிநீர் என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் விற்பனை செய்யத் தொடங்கியிருப்பது சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
குடிநீர் என்பது ஒரு இயற்கை வளம் இது ஒரு வர்த்தகப் பொருள் அல்ல இதை அரசே செய்யக்கூடாது என்று கூறும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தமிழோசைக்கு அளித்த பேட்டியில், இது போல குடிநீரை, பெருவணிக நிறுவனங்களும், அரசுகளும் விலைபொருளாக மாற்றுவது தவறு என்று கூறுகிறார்.
குடிநீர் என்பது மனித சமூகத்துக்கு உரிமையான இயற்கை வளம். இதை அரசாங்கங்கள் பொது இடங்களிலும், வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் கொடுத்து, அதை மக்கள் இயல்பாக உபயோகித்து வந்த காலம் போய், இப்போது, அரசால் விநியோகிகப்படும் குழாய் நீர், குடிக்கப் பாதுகாப்பானதல்ல, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரே, குடிக்க உகந்த்து என்ற கருத்தாக்கத்தை பொதுப்புத்தியில் செலுத்தியது யார் என்பதை ஆராயவேண்டும் என்கிறார் சுந்தர்ராஜன்.
இந்தியா மக்கள் தொகை மிகுந்த நாடு , அனைவருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது அரசால் முடியாது என்ற வாதம் சரியானதல்ல என்றும் அவர் கூறுகிறார்.
குடிநீரை விலைபொருளாக்குவதால், வசதியுள்ளவர்கள் மட்டுமே அதைப் பெற முடியும், வசதியில்லாதவர்களுக்கு அது எட்டாத ஒரு பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
