திருமணத்திற்கு முன்பே ஆண்மை பரிசோதனை சாத்தியமா?

Sep 09, 2014, 12:28 PM

இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் இருவரும் பாலியல் ரீதியில் தாம்பத்தியத்துக்கு தகுதியானவர்களா என்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென சட்டமியற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் யோசனை தெரிவித்திருக்கிறார்.

விவாகரத்து கோரி நீதிமன்றம் வரும் வழக்குகளில் பாலியல் உறவுக்கு தகுதியற்ற தம்பதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் இத்தகைய சோதனைகள் நடத்துவது அதற்கான தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கணவர் உடலுறவுக்கு தகுதியற்றவர் என்பதால் அவரிடமிருந்து தனக்கு மணவிலக்கு அளிக்கும்படி கோரி முதுகலை பட்டம் படித்த பெண் ஒருவர் தொடுத்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

இதுபோன்ற திருமணங்கள் ஆணின் தாம்பத்திய உறவுக்கு தகுதியற்ற தன்மையை மறைத்து அவர் வீட்டின் பெரியவர்களின் விருப்பம் மற்றும் சமூக நிர்பந்தம் காரணமாக நடத்தப்படுவதாகவும், அதன் விளைவாக திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த நீதிபதி, இந்த போக்கை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆராயப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மட்டும் 2009 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த மணமுறிவு வழக்குகளில் 88 வழக்குகளில் கணவர் உடலுறவுக்கு தகுதியற்றவர் என்கிற காரணம் பிரதானமானதாக காட்டப்பட்டதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன், 2013 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட விவாகரத்து வழக்குகளில் 715 கணவர்கள் உடலுறவுக்கு தகுதியற்றவர்கள் என்கிற காரணம் பிரதானமானதாக கூறப்பட்டதாக தெரிவித்தார்.

நீதிபதி கிருபாகரனின் பரிந்துரைக்கும் திருமணத்திற்கு முன்பான பாலியல் தகுதி பரிசோதனை என்பது நடைமுறை சாத்தியமற்றது என்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி. நீதிபதியின் நோக்கம் உயர்வானது என்றாலும், அவர் பரிந்துரைத்திருக்கும் தீர்வானது மருத்துவரீதியிலும் நடைமுறை ரீதியிலும் சாத்தியமற்றது என்கிறார் நாராயண ரெட்டி.

திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண் பாலியல் தகுதியை நிர்ணயிக்கக்கூடிய மருத்துவ பரிசோதனைகள் செய்வதில் இருக்கும் மருத்துவ, சமூக மற்றும் சட்டரீதியிலான சிக்கல்கள் மற்றும் அவற்றின் குறைபாடுகள் குறித்து நாராயண ரெட்டி பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.