'பேரறிவாளனின் வாக்குமூலத்தை சரியாகப் பதியாமல் விட்ட அதிகாரி'
Share
Subscribe
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கும் பேரறிவாளன், போலீஸ் விசாரணையின் போது அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறை உயரதிகாரியான தியாகராஜன் அதில் ஒரு வாக்கியத்தை தான் பதிவு செய்யவில்லை, என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தன்னிடம் வாக்கு மூலம் அளித்த பேரறிவாளன், தான் சிவராசன் என்பவருக்கு பாட்டரிகளை வாங்கிக் கொடுத்த போதிலும், அதனை எதற்காக அவர் வாங்கித்தரச் சொன்னார் என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியதை தான் பதியாமல் விட்டுவிட்டதாக தியாகராஜன் கூறியுள்ளார்.
என்ன காரணத்துக்காக பாட்டரி கேட்டார் என்பது தனக்கு தெரியாது என்றும், அது கொலைக்கான குண்டுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விசயம் தனக்கு தெரியாது என்றும் பேரறிவாளன் கூறியதால், அது ஒரு குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக அல்லாமல், ஒரு விடுதலை வாக்கு மூலமாக அமைந்துவிடும் என்ற காரணத்தால், அந்த வாக்குமூலத்தை தான் பதிவு செய்தபோது தனக்கு ஒரு தொழில் ரீதியான தர்மசங்கடம் ஏற்பட்டதாக தியாகராஜன் கூறுகிறார்.
தான் அப்படிச் செய்ததை ஒரு தவறு என்று கூடச் சொல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தமது தாக்குதல் திட்டம் எவருக்கும் தெரியாது என்று ஒரு வயர்லஸ் தொடர்பில் சிவராசன் கூறிய தகவல் கிடைத்தபோது, முன்னர் தனக்கு கொலை பற்றி தெரியாது என்று பேரறிவாளன் கூறியது உண்மை என்பது உறுதியாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே, தற்போது பேரறிவாளன் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருப்பதால், தான் செய்த அந்த விடயம் அவரது உயிரைக் காப்பாற்றலாம் என்பதால் தான் இப்போது அதனை வெளிப்படையாகக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
