சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை
Share
Subscribe
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிதம்பரம் கோயில் பிரச்சினை பற்றிய சர்ச்சைக்கு சட்டரீதியான முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆனால் அரசியல் ரீதியாக அவ்வப்போது பிரச்சினைகள் வரலாம் என்கிறார் சிதம்பரம் வழக்கறிஞரும் , பொது தீட்சிதர்கள் சங்கத்தின் முன்னாள் ஆலோசகருமான ஏ.சம்பந்தம்.
தீர்ப்பு குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட சம்பந்தம், தீர்ப்பை எதிர்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, இதை மறு ஆய்வு செய்யக்கோருவதுதான் , ஆனால் அதில் அவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்று கூற முடியவில்லை என்றார்.
கோயிலைப் பொறுத்தவரை, அதை நிர்வகிக்கும் பொறுப்பு தீட்சிதர்களுக்கே இருப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது என்றார் அவர். ஆனால் இதனால் கோயில் ஒரு பொதுச்சொத்து என்ற நிலை மாறுகிறதா என்று கேட்டதற்கு, நடராஜர் கோயில் ஒரு பொதுக் கோயில் என்ற விஷயத்தை எந்த ஒரு நீதிமன்றமும் மறுக்கவில்லை , கோயிலை நிர்வகிக்கும் உரிமை பற்றித்தான் சர்ச்சை நடந்து வருகிறது என்றார் அவர்.
ஆனால் சட்டரீதியாக இந்த வழக்கு இப்போது ஒரு முடிவுக்கு வந்தாலும், அரசியல் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப சிதம்பரம் கோயில் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றார் சம்பந்தம்.
