பிப்ரவரி 19, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (19-02-2014) பிபிசி தமிழோசையில்,
ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று புதன்கிழமை அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்த முடிவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி விமர்சித்திருப்பது குறித்த செய்திகள்;
தமது விடுதலைக்குப்பிறகு நளினியும் அவரது கணவர் முருகனும் லண்டனில் இருக்கும் தமது மகளிடம் சென்று வாழ விரும்புவதாக அவர்களின் வழக்கறிஞர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவொன்று தென்னாப்ரிக்காவுக்கு பயணமாகியுள்ளது. அமைச்சர் நிமால் ஸ்ரீபால டிசில்வா தலைமையிலான இந்தக் குழுவில் ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துணை அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா உட்பட பலர் இன்று கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து தென்னாப்ரிக்க அரசின் வெளிவிகாராத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;
இந்தியாவுக்கும் இலங்கையின் வட பிராந்தியத்துக்கும் இடையில் நேரடி விமானம் மற்றும் கப்பல் சேவையை துவக்கும்படி இலங்கையின் வடமாகாண சபை கோரியிருப்பது பற்றி வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் செவ்வி;
மனிதர்களுக்கு மூளைத்தண்டுவடம் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் உடலின் சகல இயக்கமும் நின்றுவிடும். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு செயற்கை முறையில் மீண்டும் உடல் இயக்கத்தை உருவாக்குவது தொடர்பான ஆய்வில் எட்டப்பட்டிருக்கும் முக்கிய முடிவு பற்றிய செய்திக்குறிப்பு ஆகியவற்றை கேட்கலாம்.
