நோ பயர் சோன்: இந்திய அரசின் தடைக்கு அரசியலே காரணம்

Feb 22, 2014, 07:19 PM

Subscribe

இலங்கைப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமைமீறல்களை காட்டும் நோ பயர் சோன்-(NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளதற்கு அரசியலே காரணம் என்கிறார் திரைப்படத் தணிக்கைத்துறையின் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் வி பாலு.

இந்த திரைப்படத்தை இந்திய திரையரங்குகளில் காட்ட அனுமதித்தால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை அது பாதிக்கும் என்று தணிக்கைத்துறையினால் கூறப்படும் காரணம் இந்திய தணிக்கைச் சட்டப்படி சரியானதே என்று கூறும் பாலு, ஆனால் இந்தமாதிரியான தடைகள் வெறும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் மட்டும் அளிக்கப்படுவதில்லை என்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தண்டனைவிதிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழுபேரின் விடுதலை தமிழ்நாட்டு அரசியலில் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இந்த பின்னணியில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் அனுமதித்தால் அதனால் அரசியல்ரீதியிலான பிரச்சனைகள் உருவாகலாம் என்று இந்திய அரசு நினைப்பதும் இந்த முடிவுக்கான காரணமாக இருக்கும் என்று கூறினார் பாலு.

இணையத்தில் முழுமையாக கிடைக்கும் இந்த ஆவணபடம் ஏற்கெனவே பல மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில் இந்திய அரசின் திரைப்படத் தணிக்கைத்துறையின் இதுபோன்ற சான்றிதழ் மறுப்புக்கள் எந்தவிதத்திலும் இந்த ஆவணப்படத்தை தடுத்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.