விஷ ஊசி பிழைத்ததால் பரிதாபமாக உயிரிழந்த மரணதண்டனைக் கைதி

Apr 30, 2014, 04:07 PM

Subscribe

அமெரிக்காவில் ஒக்லாஹோமா மாநிலத்தில் கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக விஷ ஊசி செலுத்தப்பட்டபோது, அந்த ஊசியில் இருந்த விஷ மருந்துகள் ஒழுங்காக வேலைசெய்யவில்லை.

இதனால், மரண தண்டனை நிறைவேற்றம் பாதியில் நிறுத்தப்பட்டபோது கொஞ்ச நேரத்தில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடித்து இறந்துபோனார்.

அமெரிக்காவுக்கு விஷ ஊசி மருந்துகள் ஏற்றுமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றிய மருந்துக்கம்பனிகள் நிறுத்திக் கொண்டது முதல் அமெரிக்க மாநிலங்கள் மரண தண்டனை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை சந்தித்துள்ளன.

முன்னெப்போதும் பரிசோதித்துப் பார்க்காத மருந்துக் கலவைகளை சில மாநில அரசுகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

இன்னும் சில அரசுகள் தமக்குத் தேவையான விதத்தில் விஷ மருந்துகளை தயாரித்து தருமாறு சில மருந்துக் கம்பனிகளைக் கேட்டுள்ளன.

ஒக்லாஹோமாவில் பயன்படுத்தப்பட்ட மூன்று மருந்து கலவையான விஷ ஊசி டெக்ஸாஸ் மாநிலத்தில் 1982-இல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பொதுவான நடைமுறையாகிவிட்டது.

மற்ற, நச்சுவாயு , மின்சார நாற்காலி போன்ற வழிமுறைகளை விட இந்த விஷ ஊசி முறை கருணைத்தன்மை மிக்கது என்று தான் கூறப்பட்டுவந்தது.

ஆனால் இந்த மூன்று மருந்து கலவை ஊசி முறையும் தேவையற்ற வேதனைகளை ஏற்படுத்துவதாகத்தான் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல அமெரிக்க மாநிலங்கள் இப்போது தனி மருந்து விஷ ஊசி முறைக்கு மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.