“ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்தார்”: விக்னேஸ்வரன்
Share
Subscribe
இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகளில் சிலரே சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் விமர்சித்திருக்கிறார்.
தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய அளவில் தொழிலாளர்களின் இன்றைய உரிமைகளை சாத்தியமாக்கிய தொழிலாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையை தமிழர்களும் தமது அரசியல் செயற்பாடுகளில் கடைபிடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைப் போரில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை அடுத்து உலகநாடுகளின் கவனம் ஈழத்தமிழர் பட்ட இன்னல்கள் தொடர்பில் குவிந்திருக்கும் இன்றைய சூழலில் இலங்கை அரசு நிகழ்த்திய பாரிய மனித உரிமைகள் தொடர்பான ஆதாரங்களை ஆவணமாக்கி ஐநாமன்றத்திடம் கையளிக்க வேண்டிய முறையில் கையளிக்கவேண்டிய முக்கிய பணி இலங்கை தமிழர்களின் முன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணையில் தமிழர் தரப்பு கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் அவர் தமது பேச்சில் விரிவாக விளக்கினார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சி நிரந்தரமானது என்கிற இறுமாப்புடன் செயற்பட்டுவருவதாக குற்றம் சாட்டிய சி வி விக்னேஸ்வரன், ஒருகாலத்தில் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்த பிரபாகரனை பற்றி நன்கு அறிந்த ஜனாதிபதி தற்போது தனது அதிகாரம் நிலையானது என்கிற இறுமாப்பில் வடபகுதியில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தை திரும்பப்பெற மாட்டேன் என்று கூறுவதைக்கண்டு தான் பரிதாபப்படுவதாகவும் தெரிவித்தார்.
