மே 2 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 02, 2014, 06:08 PM

Subscribe

இன்றைய (02-05-2014) பிபிசி தமிழோசையில்,

இலங்கையில் பௌத்த கடும்போக்கு சக்திகளிடமிருந்து தமது சமூகத்தைப் பாதுகாக்குமாறு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களில் ஒருவரான ஹூனைஸ் பாரூக்கின் பேட்டி;

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது மீண்டும் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை விரிவுரைகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டு மாணவர்கள் வளாகத்தில் நடமாட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது குறித்த செய்திகள்;

சென்னை குண்டுவெடிப்பு குறித்து புலனாய்வு செய்துவரும் தமிழக காவல்துறையினர் இந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்தும், பட்னா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்தும் ஒன்றே என்று தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

குஜராத்தில் இளம் பெண் ஒருவர் மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காவல்துறையினரை பயன்படுத்தி சட்டவிரோதமாக உளவு பார்க்க உத்தரவிட்ட விவகாரம் தொடர்பில் விசாரணைக்கான நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

சீனர்களும் இந்தியர்களும் அதிக அளவில் வாழும் ஒரு நாடு சிங்கப்பூர், ஆனால் அந்நாட்டுக்கு வெளியிலிருந்து செல்லும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் இருக்கும் சிரமங்கள் குறித்த அலசல்; வியட்நாம் போரின் முடிவில் அமெரிக்காவின் கேவலமான தோல்வியாகக் கருதப்பட்ட சேகோன் நகரத்தின் வீழ்ச்சி நடந்து இந்த வாரத்துடன் 39 ஆண்டுகளாகின்றது. சுமார் ஆறுலட்சம் அமெரிக்கப் படையினர் நாடு திரும்பியபோது அவர்களின் வியட்நாமிய காதலிகளையும் பிள்ளைகளையும் கைவிட்டே சென்றனர். அப்படி கைவிட்டுச் சென்ற தனது மகனைத் தேடி வியட்நாமுக்குச் செல்லும் முன்னாள் அமெரிக்க இராணுவ வீரருடன் இணைந்துகொண்டார் பிபிசி செய்தியாளர் Sue Lloyd-Roberts வழங்கும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.