'வெளிநாட்டு பணியாளர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் நடவடிக்கை போதாது'
Share
Subscribe
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இலங்கையர்களை பாதுகாப்பதற்கான தமது நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று ஐநா நிபுணர்கள் கோரியிருக்கிறார்கள்.
வெளிநாட்டுப் பணியாளர்கள் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக, பணியாளர்களை ஆட்சேர்க்கும் போதும், அவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றும் காலத்திலும், அவர்கள் திரும்பி வரும் போதும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்களின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
புலம்பெயர்ந்து செல்வோரின் மனித உரிமைகளுக்கான ஐநாவின் சிறப்புத் தூதுவரான கிரெப்போ அவர்கள் இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில், இலங்கையில் வெளிநாட்டுப் பணிகளுக்காக ஆட்சேர்க்கும் முகவர் நிறுவனங்கள் உரிய தரத்தை கொண்டிருக்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
முறையற்ற துணை முகவர்களும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.
கடந்த காலங்களில் வெளிநாட்டுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பது ஒரு பெரிய தொழிற்துறையாக இலங்கையில் வளர்ந்திருப்பதாகவும், 18 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதாகவும் கூறும் ஐநாவின் அறிக்கை, இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பால் பணியாளர்களின் குடும்பங்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் கூறியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மூலமாக இந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலமான வருமானம் திகழ்வதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த வருமானத்தில் தங்கி இருப்பதாகவும் அது கூறுகிறது.
வெளிநாட்டு ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களில் பல மோசடிகள் நடப்பதாகவும், உள்ளூரில் ஆட்சேர்க்கப்படும் போது செய்யப்படும் பணி ஒப்பந்தம், வெளிநாட்டுக்கு சென்ற பின்னர் மாற்றப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஐநா அறிக்கை கூறுகிறது.
இதனால், அவர்களுக்கு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட பணியல்லாமல், வெறு கடினமான பணிகள் வழங்கப்படுவதுடன், சம்பளமும் குறைக்கப்படுவதாகவும் அது கூறுகிறது.
பணிப்பெண்கள்
இலங்கை வெளிநாட்டுப் பணியாளர்களில் கணிசமானவர்கள் பெண்கள் என்றும் அவர்கள் வெளிநாடுகளில் பாலியல் ரீதியாகவும், வேறு வகைகளிலும் துன்புறுத்தப்படுகின்ற மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், அத்துடன் உள்ளூரில் அவர்களது குடும்பங்களும், பிள்ளைகளும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் ஐநா நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெளிநாடுகளில் இறந்த பலரது சடலங்கள் சேதமடைந்தவையாக, உடற்பாகங்கள் துண்டிக்கப்பட்டவையாக இலங்கை வந்து சேர்ந்த சம்பவங்கள் குறித்து தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறும் நிபுணர்கள், அவை குறித்து உரிய உடற்கூற்றியல் சோதனைகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும், சில சமயங்களில் உறவினர்களுக்கு சடலம் காண்பிக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு திரும்பி வருகின்ற முறையற்ற குடியேற்றக்காரர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் சில சமயங்களில் உரிய வகையில் நடத்தப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை குறைகூறுகிறது.
5 குழந்தைகள் தமது குடும்பத்தினருடன், கல்வி எதுவும் இல்லாமல், 2 வருடங்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து தாம் அறிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அரசாங்கத்தாலும், வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களாலும் ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும், இலங்கையின் உரிமைகளுக்கான பெண்கள் என்னும் அமைப்பைச் சேர்ந்த சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் நிறையச் செய்ய வேண்டியுள்ளது என்று கூறுகின்றார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கு கேட்கலாம்.
