இரும்புக் கால தாழிகள், பொருட்கள் ஆரோவில்லில் அகழ்ந்தெடுப்பு
Share
Subscribe
துச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் இரும்பு காலத்தைச் சேர்ந்த அதாவது கி.மு. 300ஐச் சேர்ந்த , இறந்தவர்களின் உடல் எச்சங்களைப் புதைக்கும் தாழிகள், கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நடந்த இந்த அகழ்வாய்வில், ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. இதில் 4 தாழிகள் கிடைத்துள்ளன. இந்த தாழிகளுக்குள் சிறு சிறு கிண்ணங்கள் போன்ற வேறு பொருட்களும் இருந்தன. இவை தவிர, 4 வாட்கள், ஈட்டி, கோடாலி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. அந்த இரும்புக் கோடாலி மரக் கைப்பிடியில் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. மரம் மக்கிவிட, இரும்புக் கோடாலியும் கம்பியும் கிடைத்துள்ளன.
தவிர, பித்தளையால் ஆன 3 மணிகளும் கிடைத்துள்ளன. கண்ணாடி, கற்களால் ஆன கழுத்தில் அணியக்கூடிய மணிகளும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
இங்கிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் எதிலும் எழுத்துக்கள் இல்லை. “தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.பி. 200 வாக்கில்தான் உருவாயின. ஆனால், இங்கு கிடைத்திருக்கும் பொருட்கள் கி.மு. 300ஐச் சேர்ந்தவை. ஆகவே பிராமி எழுத்துக்கள் ஏதும் இல்லை. இருந்தபோதும், குறியீடுகள் இருக்கின்றன. இந்தக் குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆய்வுசெய்ய வேண்டும்” என்கிறார் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய தாகூர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் பெ.ரவிச்சந்திரன்.
புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில், அரியாங்குப்பம் அருகே இருக்கும் பிரசித்திபெற்ற அகழ்வாய்வுத் தலமான அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களுக்கும் இந்த ஆய்வில் கிடைத்த பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார் ரவிச்சந்திரன். இருப்பினும் அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களைவிட இங்கு கிடைத்த பொருட்களில் வேலைப்பாடுகள் அதிகம் இருக்கின்றன.
இந்த ஆய்வுக்கு ஆரோவில் பவுண்டேஷன் நிதியுதவி அளித்துள்ளது. இதுவரை அகழ்வாய்ந்து எடுக்கப்பட்ட பொருட்களைச் சுத்தம் செய்து பாதுகாப்பதற்காக ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு ஜூலை மாதத்தில் மீண்டும் அகழ்வாய்வு தொடரவிருக்கிறது. ஆரோவில் பகுதியில் மாத்ரி மந்திரிலிருந்து பாரத் நிவாஸ் வரையிலான 500 மீட்டர் பகுதி முழுவதையும் ஆய்வு செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆங்கிலேயர், பிரஞ்சுக்கார்ர் வருகைக்கு முந்தைய பாண்டிச்சேரி பகுதியின் வரலாறு, குறிப்பாக இரும்புக்கால வரலாறு தெளிவாக இல்லை. இப்போது கிடைத்திருக்கும் பொருட்கள் அந்த இருளை நீக்க உதவும் என்கிறார் ரவிச்சந்திரன்.
