"தமிழ் திரைப்படங்கள் திருநங்கையரை மோசமாக சித்தரிக்கின்றன"

Jun 22, 2014, 02:41 PM

Subscribe

திருநங்கையர் திரைப்படத் திருவிழா ஒன்று புதுச்சேரியில் நடந்துள்ளது.

தமிழகத்தில் ஒன்றிரண்டு இடங்களில் திருநங்கையர் சம்பந்தமான குறும்படங்களும் ஆவணப்படங்களும் ஏற்கனவே காண்பிக்கப்பட்டுள்ளன என்றாலும், இரண்டு நாட்கள் அளவுக்கு முழு அளவில் திருநங்கையர் திரைப்படத் திருவிழா ஒன்று நடப்பதென்பது இதுவே முதல்முறை.

திருநங்கையர் நலனுக்காக குரல்கொடுத்துவரும் சகோதரன் என்ற அமைப்பும், முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் அங்கமான புதுச்சேரி திரைப்பட மன்றமும் இணைந்து இந்த திரைப்பட விழாவை நடத்துகின்றன.

திருநங்கையர் குறித்த முழு நீள தமிழ் திரைப்படம் ஒன்று, குறும்படங்கள், ஆவணப்படங்கள், திருநங்கையரின் படைப்புகள் என மொத்தம் 18 படங்கள் இந்த திருவிழாவில் திரையிடப்படுகின்றன.

திருநங்கையர் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மைய நீரோட்ட சமூக கலை பண்பாட்டில் திருநங்கையருக்கு இடமளிப்பதும் இந்த திரைப்பட விழாவின் நோக்கம் என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் புதுச்சேரி திரைப்பட மன்றத்தைச் சேர்ந்த பரசுராமன் கூறினார்.

தமிழ் திரைப்படங்களில் திருநங்கையர் மோசமாக சித்தரிக்கப்படுவதும், அவர்களது பிரச்சினைகளை கதைக்கருவாக கொண்ட படங்கள் வராதிருப்பதும் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.