.இந்திய பட்ஜெட்டில் கல்வித்துறை அறிவிப்புகள் - ஓர் கண்ணோட்டம்

Jul 10, 2014, 03:41 PM

Subscribe

இந்தியாவில் ஆட்சிக்கு வந்துள்ள நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா அரசாங்கம் தாக்கல் செய்துள்ள முதல் வரவுசெலவுத் திட்டத்தில், கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஆரம்பக் கல்விக்கென்றும் பள்ளிக்கூட கல்விக்கென்றும் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, உயர்கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஐ ஐ டி, ஐ ஐ எம், எய்ம்ஸ் போன்ற உயர்தர அரசு உயர் கல்வி நிறுவனங்களை கூடுதலான இடங்களில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை சம்பந்தமாக வரவுசெலவுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள அறிவிப்புகள் பற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாதிக் பிபிசியிடம் கருத்து தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே திட்டமிட்டதுபடி கூடுதலான உயர்கல்வி நிறுவனங்களை அமைக்கின்ற பணியை தற்போதைய அரசு முன்னெடுக்கிறது என்றும் தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டமாக அதைப் பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

கல்வியை அடிப்படை உரிமையாக்கி முந்தைய அரசாங்கம் சட்டம் இயற்றிய நிலையில், ஆரம்பக் கல்வி, பள்ளிக்கூட கல்வியில் தற்போதைய அரசு கவனம் செலுத்தியுள்ளது என்றும், ஆனால் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், அதில் பெரிய முன்னேற்றம் காண முடியாது என்று பேராசிரியர் சாதிக் தெரிவித்தார்.

கல்விக் கடன்களின் வட்டிவிகிதத்தை குறைத்து, கடன் நடைமுறைகளை எளிமையாக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாலும், நிஜமான ஏழைகள் கடன்களை பெறும் யதார்த்தம் இல்லை என்று அவர் கூறினார்.