ஆகஸ்ட் 15, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (15-08-2014) பிபிசி தமிழோசையில்
இந்தியாவின் புதிய பிரதமராக தேர்வான பிறகு தனது முதல் சுதந்திர தின உரையை இன்று ஆற்றிய நரேந்திர மோடி. நேரு காலத்தில் இருந்து செயற்பட்டுவரும் இந்தியாவின் திட்டக்குழுவை கலைக்கப்போவதாக அறிவித்திருப்பது சரியான முடிவா என்று தமிழக அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்து இந்தியாவின் மத்திய அரசின் திட்டக்குழுவுடன் கடந்த காலத்தில் செயற்பட்ட பொருளாதார பேராசிரியர் சீனிவாசனின் ஆய்வுக்கண்ணோட்டம்;
இன்றைய சுதந்திர தின உரையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் இந்திய பெற்றோர் ஆண் குழந்தைகளையும் கண்டித்து வளர்க்கவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் அறிவுரை குறித்து சென்னை பெண்கள் சிலரின் கருத்துக்கள்;
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்ள ஒரு கிராமத்தில் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அபராதம் விதித்து உள்ளூர் பஞ்சாயத்து தீர்ப்பளித்திருப்பது சர்ச்சையை தோற்றுவித்திருப்பது குறித்த செய்தி;
இந்தியாவின் நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கும் தற்போதைய நடைமுறையை ரத்துசெய்யும் சட்டம் ஒன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் பரஸ்பரம் மற்ற துறையினரின் பணியில் தலையிடக்கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கையிடம் அரசியல் தஞ்சம்கோரி தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது குறித்து இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லக்ஸான் டயஸ் பிபிசிக்கு அளித்துள்ள தகவல்கள்;
இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவிப்பிள்ளை பக்கசார்பாக செயற்படுவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி குறித்து பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றை கேட்கலாம்.
