"உற்பத்தித்துறையை மேம்படுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது"

Sep 25, 2014, 04:03 PM

Subscribe

இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் வகையில் மோடி அரசு அறிவித்திருக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்கிறார் தொழில் துறை சம்மேளனத்தின் தென்னிந்தியப் பிரிவின் முன்னாள் தலைவர் கருமுத்து தி.கண்ணன்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த "மேக் இன் இந்தியா" ( இந்தியாவிலேயே தயாரிப்போம்) என்ற உற்பத்தித்துறை ஊக்குவிப்புத் திட்டம் பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட கருமுத்து தி.கண்ணன், எந்த ஒரு நாட்டிலும், விவசாயம், தயாரிப்புத் துறை பின்னர் சேவைத் துறை என பொருளாதார வளர்ச்சியின் படிகள் இருக்கும். ஆனால் இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் சேவைத்துறை பெரிதாக வளர்ந்த அளவுக்கு , தயாரிப்புத் துறை வளரவில்லை. இந்தத் துறையில் ஏற்பட்ட வெற்றிடத்தை சீனா பிடித்துக்கொண்டு பெரிதாக வளர்ந்துவிட்டது , இதை இப்போது சரி செய்ய இந்திய அரசு அறிவித்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை, என்றார்.

பொருட்கள் தயாரிப்புத் துறை வளரவேண்டுமென்றால், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளாகக் கருதப்படும், மின்சாரம், சாலை வசதிகள், துறைமுக மற்றும் விமானத் துறை வசதிகள் பலப்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஒப்புக்கொண்ட கண்ணன், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மின்சார வசதி சற்று மேம்பட்டிருக்கிறது என்றார். கட்டமைப்பு வசதிகள் முதலில் வரவேண்டுமா அல்லது தொழில் வளர்ச்சி பெருகிய பின்னர், கட்டமைப்பு வசதியும் பெருகுமா என்பது கோழியா, முட்டையா எது முதலில் என்ற கேள்வியைப் போன்றது, ஒன்றோடு ஒன்று இணைந்துதான் வளரவேண்டும் என்றார் அவர்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுவது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதப்படும் நிலையில், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், இந்த அரசியல் சர்ச்சையை எழுப்பக்கூடிய தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுமா என்று கேட்டதற்கு, பல சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தைய சட்டங்கள் அவை திருத்தப்படுவது அவசியம் என்றார். மேலும் இந்தியாவில் தற்போது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன எனவே, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டால், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று கருதுவது தவறு என்றார் அவர்.

இந்தியாவில் பதவியேற்றிருக்கும் மோடி அரசு, புதிய தொழில்கள் வருவதற்குத் தடையாக இருக்கும் நிர்வாகத் தாமதங்கள் போன்றவற்றைக் களைவதில் முனைப்பு காட்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.