வணிகர்கள் கடையடைக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள்: தா வெள்ளையன்

Oct 04, 2014, 05:09 PM

Subscribe

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டின்கீழ் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் ஆளும் அதிமுகவினர் நடத்தும் ஆர்பாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் அண்டைமாநிலமான பாண்டிச்சேரியில் சனிக்கிழமை அதிமுக 12 மணிநேர கடையடைப்பு நடத்தியது.

பாண்டிச்சேரியில் நடந்த 12 மணிநேர பந்த் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த புதுவை அதிமுக சட்டமன்றத் துணைத்தலைவரான அன்பழகன் எம் எல் ஏ, இப்படியான பந்த் நடத்தும்படி தமிழ்நாட்டிலும் பாண்டியிலும் இருக்கும் வணிகர்களே தங்களிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

அதிமுக தரப்பில் கூறப்படுவதைப்போல தமிழக வணிகர்கள் தாங்களாகவே விரும்பி கடைகளை அடைத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக தரப்பில் கூறப்படுவது சரியான தகவல் அல்ல என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழ்நாட்டின் வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் த வெள்ளையன்.

அதிமுக ஆதரவு வணிகர்கள் சிலர் வேண்டுமானால் அப்படிச் செய்யலாமே தவிர, மற்ற வணிகர்களை கடையடைக்கும்படி அதிமுகவினர் வற்புறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்ட அன்று தமிழ்நாட்டில் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட வணிகர்களின் கடைகள் குறித்த விவரங்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களையும் தாங்கள் சேகரித்துவருவதாகவும் அவர் கூறினார்.

இவற்றை அரசிடம் கொடுத்து அவற்றுக்கான இழப்பீடுகளை கோரும் யோசனையும் தம்மிடம் இருப்பதாகவும் வெள்ளையன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.