ஜெயலலிதாவை தமிழகச் சிறைக்கு மாற்றவேண்டும்: தா பாண்டியன்

Oct 05, 2014, 12:51 PM

Subscribe

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததான ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவை தமிழ்நாட்டில் இருக்கும் சிறைக்கு மாற்றவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா பாண்டியன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அங்கே ஏதாவது சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அதன்விளைவாக ஏற்கெனவே காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் கடந்தகால கசப்பு மேலும் அதிகரித்து விரும்பத்தகாத விபரீதங்கள் நேரும் என்பதாலேயே தாம் இந்த கோரிக்கையை வைப்பதாக தா பாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இப்படி ஜெயலலிதாவை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்றுவதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ, அதன் மீதான மேல்முறையீடோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் என்று கைதுசெய்யப்பட்டிருக்கும் பலர், பல ஆண்டுகாலம் கர்நாடக சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்பாக இத்தகைய கோரிக்கைகளை வைக்காமல், ஜெயலலிதாவுக்கு மட்டும் இத்தகைய சலுகையை கேட்பது, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு அளவுகோள், அரசியல் செல்வாக்கில்லாத ஏழைகளுக்கு ஒரு அளவுகோள் என்கிற இரட்டை அளவுகோளாக விமர்சிக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, இத்தைய ஒப்பீடே அடிப்படையில் தவறானது, பொருத்தமற்றது என்று நிராகரித்தார் தா பாண்டியன்.

வீரப்பனின் கூட்டாளிகள் என்று தண்டிக்கப்பட்டு கர்நாடக சிறையில் இருப்பவர்கள் கொலைக்குற்றச்சாட்டின்கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் ஜெயலலிதாவை அவர்களுடன் ஒப்பிடமுடியாது என்றும் கூறினார் தா பாண்டியன்.

தமிழக மக்களின் அன்பைப்பெற்று தமிழக மக்களின் பிரதிநிதியாக முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா என்றும் அவருக்கு கர்நாடக சிறையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அது அரசியல் விபத்தாக மாறிவிடும் என்றும் இருமாநில மக்களுக்கு இடையிலும் அதனால் ரத்தக்களறி ஏற்படும் என்றும் தா பாண்டியன் அச்சம் வெளியிட்டார்.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு கர்நாடக சிறைகளில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதனால் எந்தத்தகறாறும் எழாது என்றும் விளக்கமளித்தார் தா பாண்டியன்.