மீண்டும் வருகிறது யாழ். வரை ரயில் சேவை; யாழ்தேவி வெள்ளோட்டம்
Share
Subscribe
யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னோடியாக யாழ் தேவி ரயில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்தத்தினால் சேதமடைந்திருந்த வட பகுதிக்கான ரயில் பாதை, வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடபகுதிக்கான இரவு தபால் ரயில், யாழ்தேவி, உத்தரதேவி, நகர்சேர் கடுகதி என பல ரயில்கள் சேவையில் முன்னர் சேவையில் ஈடுபட்டிருந்தன. இவற்றில் யாழ்தேவி என்பது வடபகுதி மக்களின் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் ஒன்றித்திருந்தது. இத்தகைய பெருமைக்குரிய யாழ்தேவி ரயில் வடபகுதியையும் தென்பகுதியையும் வர்த்தக, பொருளாதாரம், கலை கலாசாரம் என பலதரப்பட்ட வகைகளில் ஒன்றிணைத்திருந்தது. சனியன்று வெள்ளோட்டம் விடப்பட்ட யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தபோது, அதனைப் பார்ப்பதற்காகப் பெருமளவானோர் அங்கு குழுமியிருந்தார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ் தேவி ரயில் தனது சேவையை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முன்வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அவர்களில் சிலர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்கள். வடபகுதிக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மக்களின் போக்குவரத்துச் தேவையை பேருந்துகளே பூர்த்தி செய்துவந்தன.
இப்போது யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதையடுத்து தனியார் பேரூந்து சேவை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
