'ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானத்தை இலங்கை துஷ்பிரயோகம் செய்தது'
Share
Subscribe
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களை தடை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐநாவின் பாதுகாப்புச் சபையின் 2001 ஆம் ஆண்டின் தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள உலக தமிழர் பேரவை அது குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு பிரித்தானிய அரசாங்கத்தை கோரியுள்ளது.
இந்த விடயம் குறித்து உலக தமிழர் பேரவையின் தலைவர் வண. டாக்டர் எஸ்.ஜே. இமானுவல் அவர்கள், பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து ஐநாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட 1373 ஆம் இலக்க தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனி நபர்களையும் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஆனால், இந்த தடைப்பட்டியலை தயாரித்த போது அதற்கான உரிய நடைமுறைகளை இலங்கை அரசாங்க கையாளவில்லை என்று கூறுகின்ற உலக தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் அவர்கள், அதேவேளை, பிரித்தானிய போன்ற ஜனநாயக நாடுகளில் சட்டத்துக்கு உட்பட்டு, பதிவு செய்து, செயற்படும் அமைப்புகளை இலங்கை போன்ற நாடுகள் தடை செய்யும் போது, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு எதனையும் ஐநா தீர்மானம் வழங்கியிருக்கவில்லை என்றும் கூறுகிறார்.
ஆகவே பிரித்தானிய இந்த விடயத்தை ஐநா பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமது அமைப்பு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுரேன் சுரேந்திரனின் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
