'பாப்பரசரின் விஜயம் குறித்து வத்திக்கான் குழுவே முடிவெடுக்கும்'
Share
Subscribe
பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் இலங்கைக்கான விஜயம் குறித்த இறுதி முடிவை வத்திக்கானில் இருந்து சில தினங்களில் இலங்கை செல்லவுள்ள குழு ஒன்றே எடுக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட ஆயரான கிங்ஸிலி சுவாம்பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.
பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதேகால கட்டத்தில் அங்கு ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், இந்த இரு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடப்பது உசிதமாக இருக்காது என்று பல தரப்பினராலும் கருத்துக்கள் கூறப்பட்டிருப்பதாகக் கூறிய திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை அவர்கள், ஆகவே இது குறித்து ஆராய வத்திக்கானில் இருந்து ஒரு குழு சில தினங்களில் இலங்கை வரவிருப்பதாகக் கூறினார்.
இலங்கை வரும் குழுவினர், அங்குள்ள சகல தரப்பினருடனும் ஆராய்ந்து அதன் பின்னரே பாப்பரசரின் விஜயம் குறித்த இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இவை குறித்த ஆயர் சுவாம்பிள்ளை அவர்களின் பிபிசி தமிழோசைக்கான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
