ஸ்ரீ பெரும்புதூர் நோக்கியா ஆலை மூடப்பட்டது

Nov 01, 2014, 04:13 PM

Subscribe

சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் இயங்கிவந்த நோக்கியா செல்போன் உற்பத்தி ஆலை இன்று மூடப்பட்டது. இந்திய அரசுடனும் தமிழ்நாடு அரசுடனும் வரி தொடர்பான சிக்கலில் இருந்த இந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் நாளை முதல் பணிக்கு வர வேண்டாமென நிர்வாகம் நேற்று தெரிவித்துவிட்டது.

ஆலை மூடப்படும் போது அந்த ஆலையில் 851 நிரந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 2005ஆம் ஆண்டு ஏப்ரலில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நோக்கியா, ஸ்ரீ பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்300 மில்லியன் டாலர் முதலீட்டில் 210 ஏக்கர் பரப்பளவில் தனது தொழிற்சாலையை அமைத்தது.

துவக்கத்தில் சுமார் 3000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்த இந்த ஆலையில் உச்சகட்டமாக சுமார் 6000 தொழிலாளர்கள் வரை பணியாற்றிவந்தனர்.

2006 முதல் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகத் துவங்கின. 2008-2009 காலகட்டத்தில் இந்த ஆலை உலகின் மிகப் பெரிய செல்போன் உற்பத்தி ஆலையாக உருவெடுத்தது.

2013ஆம் ஆண்டில், அந்த ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார். 21,153 கோடி ரூபாய் அளவுக்கு நோக்கியா நிறுவனம் வரி செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை கூறியது.

இதற்குப் பிறகு, இங்கு உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்குப் பதிலாக உள்ளூர்ச் சந்தையில் விற்கப்பட்டதாகவும், அதனால், அதற்கான விற்பனை வரியாக 2400 கோடி ரூபாயை தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியது. ஆனால், சென்னை தொழிற்சாலை வரி தொடர்பான சிக்கலல் சிக்கியிருந்ததால், இங்கு தயாரிக்கப்படும் செல்போன்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டது.

இருந்தபோதும், அந்த ஒப்பந்தத்தை இந்த அக்டோபர் மாதத்தோடு முடித்துக்கொள்வதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்ததும், இந்த ஆலையில் உற்பத்தியை நிறுத்துவதாக நோக்கியா கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று அறிவித்தது.

வரி பிரச்சனையில் சிக்கியதிலிருந்தே விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்தது.

மீதமிருந்த 851 தொழிலாளர்களும் நேற்றுவரை பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். நேற்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணியாற்றிய காலத்தைப் பொறுத்து 6 லட்ச ரூபாய் முதல் ஒன்பது லட்ச ரூபாய் வரை அளிக்க இந்நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாக தொழிலாளர்கள் தெரிவத்துள்ளனர்.

தற்போது இழப்பீடு கிடைத்தாலும், அடுத்ததாக என்ன செய்வது என்பது தெரியாமல் இந்தத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்தத் தொழிலாளர்களும் வேலை தேடி களத்தில் இறங்கும்போது, அது பெரும் சிக்கலை உருவாக்கப் போகிறது என்கிறார் நோக்கியா தொழிற்சாலையின் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன்.

இது தொடர்பாக நோக்கியா நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தபோது அளித்த அறிக்கையைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினர்.

இம்மாதிரியான சிக்கல்களை தமிழ்நாடு அரசு முன்பே எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள் தொழில்துறை வல்லுனர்கள். ஃபிக்கி அமைப்பைச் சேர்ந்த ராமமூர்த்தியிடம் கேட்டபோது, இனி வரும் காலங்களில் தொழிற்சாலைகள் வரி விஷயத்தில் கவனமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இங்கு முதலீடு செய்திருக்கும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பாகவே இயங்கிவருவதால், புதிய முதலீடுகளுக்கு இந்த விவகாரம் உறுத்தலாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

ஆனால், இந்த நோக்கியா தொழிற்சாலைக்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கிவந்த ஃபாக்ஸ்கான், சால்காம்ப், செவா லாஜிஸ்டிக்ஸ் போன்ற நிறுவனங்களும் கிட்டத்தட்ட தங்கள் தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு வந்துவிட்டன. இங்கு பணியாற்றிவந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வேலைகளை இழந்துள்ளனர்.