'மீனவர் வழக்கில் சந்தேகமில்லை' - அமைச்சர் தேவானந்தா

Nov 02, 2014, 03:15 PM

Subscribe

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் போதைப் பொருள் கடத்தியதாக இந்திய மீனவர் 5 பேருடன் சேர்த்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 இலங்கை மீனவர்கள் சார்பில் இலங்கை அரசாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கும், இலங்கையின் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவருக்கும் இந்த மரண தண்டனையை இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்த நிலையிலேயே இலங்கை மீனவர்கள் 3 பேரின் சார்பில், அவர்களது உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் ஒரு கருணை மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.

இது குறித்து தமிழோசையிடம் பேசிய அமைச்சர் தேவானந்தா அவர்கள், இந்த விடயம் குறித்து நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யுமாறும், தானும் இது குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறுவதாகவும் அவர்களிடம் தெரிவித்ததாக பிபிசியிடம் கூறினார்.

இந்திய மீனவர்கள் தரப்பில் கூறப்படுவதுபோல நீதிமன்ற நடவடிக்கையில் சந்தேகம் எதனையும் இதுவரை எவரும் தம்மிடம் எழுப்பவில்லை என்றும், தான் விசாரித்த வரையிலும் அப்படியான சந்தேகம் எதனையும் காணமுடியவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை இந்த விடயத்தில் குரல் கொடுப்பவர்கள் இரு நாடுகளுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தாதவாறு இதனை கையாள வேண்டும் என்றும், அதுமாத்திரமன்றி, அவர்கள் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.