வாசன் விலகல்: "காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை"

Nov 03, 2014, 12:56 PM

Subscribe

காங்கிரசிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் விலகியிருப்பது , 1996ல் அவரது தந்தையார் ஜி.கே.மூப்பனார் காங்கிரசிலிருந்து விலகியபோது ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தாது, இரு காலகட்ட அரசியல் சூழல்கள் வித்தியாசமானவை என்கிறார் காங்கிரஸ் சார்பு ஊடகவியலாளர் கோபண்ணா. 1996ல் அப்போதைய ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு இருந்தது, அதிமுகவுடன் அந்த நிலையில் கூட்டணி வைத்துக்கொள்வது என்ற நரசிம்மராவ் காலத்திய காங்கிரஸ் தலைமையின் முடிவை, தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்த்தனர். ஆனால் , தற்போது அது போன்ற குறிப்பான அரசியல் சூழல் ஏதும் இல்லை என்கிறார் கோபண்ணா.

மேலும், காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைமையை புறக்கணித்ததாக வாசன் கோஷ்டியினர் கூறுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. கடந்த சுமார் 12 ஆண்டுகளாக வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மத்திய அமைச்சர் பதவி என்று பல பதவிகளை தலைமை தந்தது. மேலும், அவரது ஆதரவாளர்களே கட்சியின் பல பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், பதவி சுகங்களை அனுபவித்த வாசன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி , கடந்த தேர்தலில் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே கூட்டணியின்றி தேர்தலை சந்தித்தபோது, தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார் என்றார் கோபண்ணா.

ஆளும் பாஜக தமிழகத்தை குறிவைத்து இயங்கிக்கொண்டிருக்கையில்,கட்சியைப் பலப்படுத்தாமல், கட்சியை விட்டு விலகுவது என்பது, காங்கிரஸுக்கு வாசன் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்றார் கோபண்ணா