இலங்கை அகதிகள் மீண்டும் திரும்புவது "காலத்தின் கட்டாயம்"-சந்திரஹாசன்
Share
Subscribe
இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் தாய் நாடு திரும்பவேண்டும் என்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தோடு தான் உடன்படுவதாக , தமிழகத்திலிருந்து இயங்கும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் கூறினார்.
விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்த பிரச்சினை குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட சந்திரஹாசன், பல ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள், இலங்கையில் தமக்குள்ள உரிமைகளை நிலைநாட்டவும், அங்கு கஷ்டப்பட்ட சக தமிழர்களோடு தோளோடு தோள் நின்று அவர்களது உரிமைக்காக உழைக்கவும், நாடு திரும்பவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றார்.
இது தமது கருத்து மட்டுமல்ல , மக்களின் கருத்தும் அதுதான் என்றார் சந்திரஹாசன்
இது குறித்து தமது அமைப்பு அகதிகளோடு 17 முறைகள் கலந்தாய்வு நடத்திய பின்னர், அவர்களது விருப்பமும் அதுவாக இருப்பதை தாம் கண்டறிந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் நல்ல முறையில் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறிய சந்திரஹாசன், ஆனால் அவர்கள் நாடு திரும்பவேண்டுமானால் , அவர்களுக்கு சில சிறப்பு உதவிகளை இந்தியாவும், இலங்கையும் செய்ய முன்வரவேண்டும் என்றார்.
இது குறித்து தமது அமைப்பு, இந்திய இலங்கை அரசுகளிடம், 48 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை அளித்திருப்பதாகவும், இதில் காணிப்பிரச்சனை, ராணுவம் விலக்கிக்கொள்ளப்படல் போன்ற பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அகதிகள் உடனடியாக நாடு திரும்ப முடியாது, ஏனென்றால், இந்தியாவில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன என்று கூறின சந்திரஹாசன், அவர்களது நாடு திரும்புதல் என்பது ஒரு நீண்ட காலம் பிடிக்கும் ஒரு விஷயமாகவே கருதப்படவேண்டும் என்ற தமது கருத்துடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசும் உடன்பட்டிருப்பதாகக் கூறினார்.
இந்தப் பிரச்சனைகளை சுமுகமாகக் கையாள இந்தியாவும் இலங்கையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கினால் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டார். இது எழுத்து வடிவில் இல்லாவிட்டாலும், இது குறித்து இரு அரசுகளும் புரிந்துணர்வுடன் இருந்தாலே அது போதும் என்றும் அவர் கூறினார்.
