காலத்துக்கு முந்தையவர் ‘அவள் அப்படித்தான்’ இயக்குனர் ருத்ரய்யா: தியோடர் பாஸ்கரன்

Nov 19, 2014, 06:27 PM

Subscribe

செவ்வாய்க்கிழமை சென்னையில் காலமான தமிழ்த் திரைப்பட இயக்குனர் சி. ருத்ரய்யா காலத்துக்கு முந்தைய தமிழ்த்திரைப்பட இயக்குநர் என்கிறார் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.

உடல் நலமின்றி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ருத்ரைய்யா நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.

இவருடைய முதல் திரைப்படமான "அவள் அப்படித்தான்" 1978ஆம் ஆண்டில் வெளியானது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, சரிதா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் திரைப்படம், வெளியான சமயத்தில் வர்த்தக ரீதியில் வெற்றிபெறவில்லை என்றாலும் கலைரீதியாக தமிழின் முக்கியமான மைல்கல் திரைப்படங்களில் ஒன்றாக தற்போதுவரை கருதப்படுகிறது.

1980ஆம் ஆண்டு புதுமுகங்களை வைத்து கிராமத்து அத்தியாயம் என்ற திரைப்படத்தை ருத்ரய்யா இயக்கினார். அந்த திரைப்படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை என்பதோடு திரை விமர்சகர்களையும் பெரிதாக கவரவில்லை. அதற்குப் பிறகு, சில திரைப்பட முயற்சிகளில் ருத்ரைய்யா ஈடுபட்டாலும், அவை வெற்றியடையவில்லை.

தான் வாழ்ந்த காலத்துக்கு முந்தையவராக ருத்ரைய்யா இருந்ததும் அவரால் தொடர்ந்து தமிழ்ச்சினிமாவில் நீடிக்க முடியாமல் போனமைக்கும், வெற்றிபெறமுடியாமல் போனமைக்குமான காரணங்களாக இருக்கக்கூடும் என்கிறார் தியோடர் பாஸ்கரன்.