“எல்லை தாண்டும் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைதுசெய்யவேண்டும்” தமிழக மீனவர் தலைவர்
Share
Subscribe
இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக கையாள்வதைப்போல இந்திய கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டிவந்து மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைதுசெய்து கடுமையாக நடத்தவேண்டும் என்று நிரபராதி மீனவர்விடுதலைக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த அருளானந்தம் தெரிவித்தார்.
இலங்கைக்கு போதை மருந்து கடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டின்கீழ் இலங்கை நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் இந்திய அரசின் வற்புறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டு ஒரு வாரம் கூட முடியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்த அருளானந்தம், எல்லைதாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கையாள்வதைப்போலவே இந்திய எல்லைக்குள் வரும் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களமீனவர்களை இந்திய கடற்படையினர் கையாளவேண்டும் என்று அருளானந்தம் கூறினார்.
"இலங்கையிடம் இந்தியா கெஞ்சவேண்டாம்; ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவுங்கள்"
மேலும் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிச்சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வுகாணவேண்டுமானால், தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க இந்திய அரசும் தமிழக அரசும் உதவவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் அருளானந்தம்.
