'சிறைகளில் தலித்துக்கள், முஸ்லீம்கள் அதிகம் இருப்பதற்குக் காரணம் நீதித்துறை'

Nov 26, 2014, 04:03 PM

Subscribe

இந்திய சிறைகளில் முஸ்லீம்கள்,தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அதிகம் இருப்பதற்குக் காரணம் நீதித்துறையும், இலவச சட்ட உதவி அமைப்பும்தான் என்கிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன்.

சமீபத்தில் வெளிவந்த ஊடகச் செய்திகள் இந்தியச் சிறைகளில் இருப்போரில் தலித்துகள், முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினர் மட்டும் சுமார் 53 சதவீதம் இருப்பதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகப் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி கூறின.

இந்த அறிக்கையை வரவேற்ற 'பீப்பிள்ஸ் வாட்ச்' என்ற மனித உரிமை அமைப்பின் கௌரவ நிர்வாக இயக்குநர் ஹென்றி டிஃபேன், இதற்குக் காரணம் இந்த பிரிவினருக்கு எதிராக நீதித்துறை, வழக்குகளை நடத்தும் ப்ராசிக்யூஷன் துறை, மற்றும் போலிஸ் துறை ஆகியவற்றில் நிலவும் பாகுபாடு மனப்பான்மையே காரணம் என்றார்.

சிறையில் இருப்பவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க அமைப்பு இருந்தும் அந்த அமைப்பு சரிவர இயங்குவதில்லை, அந்த அமைப்பின் மூலம் இந்த வறிய மக்களுக்கு ஆதரவாக வழக்காட நியமிக்கப்படும் வழக்குரைஞர்களுக்கு, அரசு வழக்குரைஞர்களுக்குத் தரப்படும் ஊதியம் தரப்படுவதில்லை , எனவே அவர்களுக்கு ஆதரவாக வாதாட திறமை மிகுந்த வழக்குரைஞர்கள் கிடைப்பதில்லை என்றார் ஹென்றி.

நீதித்துறை, போலிஸ் துறை போன்றவற்றில் இது போன்ற நலிந்த பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரிகள் அதிகம் இல்லாததால், அவர்களது அணுகுமுறையில் ஒரு சாதிய மனோபாவம் காணப்படுகிறது. இது நீதிமன்றங்களின் பல தீர்ப்புகளிலேயே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது என்றார் ஹென்றி.