முல்லைப்பெரியாறு: கேரளத்துக்கு ஆய்வு அனுமதி வழங்கப்பட்டதற்கு தமிழகம் எதிர்ப்பு

Dec 14, 2014, 03:34 PM

Subscribe

முல்லைப்பெரியாறு அணைக்கு அருகில் வேறொரு அணையை கேரள அரசு கட்டும் பட்சத்தில் அதனால் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் வனப்பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய ஆய்வு ஒன்றை கேரள அரசு செய்துகொள்வதற்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த வனவிலங்கு தேசிய வாரிய நிலைக்குழுவின் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நான்கு மாதங்களுக்கு பின்னர் தற்போது தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், கேரளத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் இந்திய இறையாண்மையையும் மீறும் செயல் என வாதிடப்பட்டுள்ளது. புதிய அணை கட்டுவதது சம்பந்தமாக சுற்றாடல் தாக்க மதிப்பீடு செய்ய கேரளத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதை தமிழகம் எதிர்ப்பதற்கான காரணங்கள் பற்றி தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளரும், மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான ஆ.வீரப்பன் தமிழோசையிடம் பேசினார்.

முல்லைப்பெரியாறு அணைக்கும் கேரளத்திலுள்ள இடுக்கி அணைக்கும் இடைப்பட்ட பகுதியில் மற்றுமொறு அணைக் கட்டுவதற்குரிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் இல்லை என்று மிட்டல் கமிட்டி ஏற்கனவே தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது என்று வீரப்பன் குறிப்பிட்டார். தவிர 152 அடி வரைக்கும் நீரைத் தேக்குவதற்குரிய வலிமையை முல்லைப்பெரியாறு அணை பெற்றுள்ளதை ஆனந்த் கமிட்டியின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், அந்த இடத்தில் புதிய அணை கட்டுவதாக கேரள அரசு கூறுவது, முல்லைப்பெரியாறு அணையை இடித்து, நீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதற்காக கேரள அரசு நடத்தும் நாடகம் என வீரப்பன் குற்றஞ்சாட்டினார்.