இலங்கையின் புதிய அரசும் மலையகத்தில் கல்வி முன்னேற்றமும்
Share
Subscribe
இலங்கையின் மலையகப் பகுதியில் கல்வி வளர்ச்சியை முன்னேற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கல்வித்துறைக்கான ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். கடந்த பல தசாப்த்தங்களாக மலையகப் பகுதி கல்வித்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது என்பதை புதிய ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உணர்ந்துள்ளனர் என அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்த நிலையை மாற்றியமைக்க புதிய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் எனும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். முதல்கட்டமாக வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் கவனம் செலுத்தப்படும், மலையகப் பகுதியில் வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் வளாகங்களை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அதேவேளை மலையகப் பகுதியில் ஒரு பல்கலைகழகத்தை ஏற்படுத்துவதற்கான பணியின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் புதிய அரசு முயலும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு முன்பாக மலையகப் பகுதிகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறுபவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். மலையகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளதன் மூலம், பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றுவருவது சுலபமாகியிருந்தாலும், கூடுதல் வசதிகள் தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
