ஜெயிட்லி ஜெயா சந்திப்பு: விமர்சனங்களை மறுக்கிறது பாஜக
Share
Subscribe
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை இந்திய நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி சந்தித்ததில் உள்நோக்கம் இல்லை, பாஜக அரசு எந்த ஒரு நீதிமன்ற வழக்கிலும் தலையிடாது, இது வரை தலையிட்டதாக சரித்திரமும் இல்லை என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன்.
இன்று அருண் ஜெயிட்லி ஜெயலலிதாவை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்றோர் இது குறித்து விமர்சித்திருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனை பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட , தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றுள்ள கட்சியின் பொதுச்செயலர் என்ற வகையில் ஜெயலலிதாவை ஜெயிட்லி சந்தித்தார், ராஜ்ய சபாவிலும் அக்கட்சிக்கு உறுப்பினர்கள் உண்டு என்ற வகையில், இது போன்ற கட்சிகளோடு சுமுக உறவு தேவை என்ற அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடந்தது என்றார்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை இந்தியாவின் நிதியமைச்சர் அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பது என்பது , வழக்குகளில் ஆளும் பாஜகவின் நிலைப்பாடு குறித்த சந்தேகங்களை எழுப்பலாம் என்ற நிலையில் இதைத் தவிர்த்திருக்கவேண்டாமா என்று கேட்டதற்கு, இதற்கு முன்னரும் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது சட்டத்துறை அமைச்சர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்தார், ஆனால் வழக்கு சுயாதீனமாகத்தான் அதன் போக்கில் நடந்தது, என்று கூறிய வானதி, பாஜக இதற்கு முன்னரும் எந்த ஒரு வழக்கின் போக்கிலும் தலையிட்டதாக வரலாறு இல்லை என்றார்.
