பிரிட்டனுக்கு எதிராக மலேசியாவின் ஹிண்ட்ராஃப் அமைப்பு வழக்கு

Mar 22, 2015, 05:27 PM

Subscribe

மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்கு பிரிட்டன் பொறுப்பேற்ற வேண்டும் என்று கோரி, இந்திய வம்சாவளி மக்களின் உரிமைக்கான ஹிண்ட்ராஃப் அமைப்பு பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

பிரிட்டன் ஆட்சியின் கீழ் மலேயா இருந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் பேர், கூலித் தொழிலாளர்களாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியல் அமைப்பு ரீதியாக போதிய பாதுகாப்பை வழங்க பிரிட்டன் தவறிவிட்டது என்பதை பிரிட்டன் ஏற்றுக் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாங்கள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்றுள்ளதாக ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பிரிட்டன் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டது என்று கூறும் அவர், மலேசியாவின் அரசியல் சாசனத்தை பிரிட்டன் எழுதியபோதே அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன என்று மேலும் கூறுகிறார்.

தற்போது மலேசியா சுதந்திர நாடாக இருந்தாலும் முன்னர் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தினால் இந்த விஷயத்தில் நியாயம் வழங்க அந்நாட்டுக்கு ஒரு தார்மீகக் கடமையுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

காலனித்துவ ஆட்சி காரணமாக சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மலேசிய இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பில் பிரிட்டனுக்குள்ள கடப்பாடு குறித்து வழக்கில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார்.