"வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடி அனுமதி,இந்திய மீனவர்களைப் பாதிக்கும்"
Share
Subscribe
இந்தியப் பிரத்யேகப் பொருளாதாரக் கடல் பரப்பில் பன்னாட்டு நிறுவன மீன்பிடிக் கப்பல்களை அனுமதிக்கவேண்டும் என்ற மீனாகுமாரி குழுவின் பரிந்துரை இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது இந்திய மீனவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று கூறும் இந்திய மீனவர் சங்கங்கள் , எதிர்வரும் ஏப்ரல் 22ம் தேதி இந்தியத் தலைநகர் டில்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளில் ஒன்றான, தேசிய மீனவர் பேரவையின் தலைவர் மா.இளங்கோ, பிபிசி தமிழோசையிடம் கூறுகையில், இந்த மீனாகுமாரி குழுவின் அறிக்கையை , மீனாகுமார் அவர்கள் பதவி வகிக்கும் கடல்வள ஆராய்ச்சி மையத்தின் பிற வல்லுநர்களே நிராகரித்திருக்கின்றனர் என்றார்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டது போல வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியக் கடல் பரப்புக்குள் மீன்பிடிக்க அனுமதிப்பது உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தேவையான அனைத்துத் திறன்களும் இந்திய மீனவர்களுக்கு உண்டு என்பதை கன்யாகுமரி மாவட்ட மீனவர்களே நிரூபித்திருக்கிறார்கள். அந்த மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 டன்கள் மீன்களை ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து இந்திய அரசுக்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறார்கள். இதே போல மற்ற மீனவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடி வசதிகள் செய்து தந்தால், அவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு, இந்திய அரசுக்கு மேலும் நிதி ஆதாரங்களைப் பெற்றுத் தருவார்கள் , என்கிறார் இளங்கோ.
