இலங்கை 20வது திருத்தம்: 'வடகிழக்கு தொகுதிகளின் எண்ணிக்கை பாதிக்காது'
Share
Subscribe
இலங்கை அரசு இலங்கையில் தற்போது உள்ள தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் 20வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சரவை உப குழுவின் பரீசிலனைக்கு அனுப்பியிருக்கிறது.
இந்த முடிவை எடுத்த நேற்றைய இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் திகாம்பரத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இந்த புதிய மசோதாவின் படி, மாவட்டந்தோறும் கட்சிகள் தத்தம் வேட்பாளர்களை தொகுதிவாரியாக நியமித்து வாக்கு கேட்கவேண்டும் என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார். இதன் மூலம் இந்தியா மற்றும் பிரிட்டன் போன்ற முதலில் வருபவர் வெல்லும் தொகுதி தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும், இதில் வேட்பாளர்கள் தொகுதிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படுவதால், அவர்கள் தொகுதி முன்னேற்றத்துக்குரிய பொறுப்புக் கூறும் நடைமுறை அறிமுகமாகிறது என்றார்.
இலங்கை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 225லிருந்து 255ஆக உயர்த்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் நடந்து முடிந்த போரினால் பாதிக்கப்பட்டு மக்கள் பெருந்தொகையாக நாட்டை விட்டு வெளியேறிய வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது பார்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இது குறித்த இணக்கப்பாடு பிரதான கட்சிகள் மத்தியில் எட்டப்பட்டிருக்கிறது என்று கூறிய அவர் ஆனால் இது கால வரையறைக்குட்பட்டது என்றார்.
