மரண தண்டனை ஒழிப்பு குறித்து இந்திய நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது

Aug 02, 2015, 01:16 PM

Subscribe

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரும் தனி நபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றம் விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டி ராஜா சமர்பித்துள்ள இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது விவாதிக்கப்படவுள்ளது. இந்தியச் சட்டங்களில் இருந்து மரண தண்டனைகளுக்கான பிரிவுகள் அகற்றி அந்த தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியே இந்தப் பிரேரணையை தான் சமர்பித்துள்ளதாக அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தான் முன்வைத்துள்ள பிரேரணைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலகட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ராஜா கூறுகிறார். மரண தண்டனைக்கு எதிராக இந்தியாவில் மக்கள் கருத்து வலுத்து வருவதாகவும், அதன் காரணமாக நாடாளுமன்றம் தனது பிரேரணை விவாதிக்கப்படும்போது அதற்கு ஆதரவு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பல்தரப்பினர் மரண தண்டனை ஒழிப்பு குறித்து விவாதித்து வருகின்றனர் என்றும் ராஜா கூறுகிறார். மரண தண்டனையை சட்டரீதியான பிரச்சினையாகப் பார்க்காமல், அதை சமூக ரீதியான ஒரு பிரச்சினையாக பார்க்க வேண்டியது அவசியம் எனவும் ராஜா வலியுறுத்துகிறார். இந்தியாவின் தேசிய சட்ட ஆணையமும் மரண தண்டனை தொடர்பிலான கருத்தரங்குகளை நடத்தி மக்கள் கருத்துக்களை அறிந்து வருவதாகவும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் எனும் பிரேரணையை முன்னெடுத்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கூறுகிறார்.