அடையாளத்துக்காக போராடும் மலையகத் தமிழர்கள்

Aug 13, 2015, 06:32 PM
Share
Subscribe

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், மலையகப் பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் வாக்களார்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பெருந்தோட்டத்துறையில் வேலை செய்பவர்களுக்கு காணி உரிமை, மலையகம் தொடர்பிலான மக்கள்தொகை விவரங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும், அங்கு வாழும் மக்கள் 'மலையகத் தமிழர்கள்' என்று தனியாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட எட்டு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

மலையகப் பிரதேசத்தில் இப்போதுள்ள இளைஞர்கள் சமூக அரசியல் ரீதியாக கூடுதல் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள், எனவே அவர்களை இனியும் அரசியல்வாதிகள் ஏமாற்ற இயலாது என இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளவர்களில் ஒருவரான எழுத்தாளர் மூ. சிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேவேளை இத்தேர்தலுக்காக நாட்டின் இரு பிரதான கட்சிகள் வைத்துள்ள தேர்தல் அறிக்கையில், மலையக மக்களின் முன்னேற்றம், அரசியல் உரிமை குறித்து குறிப்பிடத்தக்க வகையில் எதையும் முன்வைக்கவில்லை எனவும் சிவலிங்கம் கூறுகிறார்.

நீண்டகாலமாக மலையகத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ள தேர்தல் அறிக்கையில் வரவேற்கக்கூடிய சில அம்சங்கள் காணப்படுகின்றன எனவும் சிவலிங்கம் தெரிவித்தார்.

அவரது கருத்துக்களை இங்கே கேட்கலாம்.