உசைன் போல்ட்டின் ஆளுமை:ஒரு பார்வை
Share
Subscribe
உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை மூன்றாவது முறையாக உசைன் போல்ட் தக்கவைத்துக் கொண்டுள்ளார். பீஜிங்கில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 100மீ தூரத்தை 9.79 நொடிகளில் ஓடி சாதனைப் படைத்தார். அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பியனும் சுமார் பத்தாண்டுகள் தெற்காசியாவின் மிகவும் வேகமான மனிதர் என்று அறியப்பட்டவருமான டாக்டர்.ஆர். நடராஜன். தனது சுயகௌரவத்தையும், உலகளாவிய தடகள ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அவர் நிரூபித்துள்ளார் என்கிறார் நடராஜன். தொடைகளுக்கு நடுவே காயங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், அதிலிருந்து மீண்டு வந்து உலகப் பட்டத்தை தக்கவைத்துள்ளது வியக்கத்தக்க விஷயம் எனவும் அவர் கூறுகிறார். அவருக்கும் அடுத்து வந்த ஜஸ்டின் காட்லினுக்கும் இடையேயான நேர வித்தியாசம் ஒரு நொடியில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே என்பதால், இந்த இருவரிடையேயான போட்டி தொடர்ந்து சில காலம் இருக்கும் எனவும் அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் மிகப்பெரும் போட்டி எனக் கருதப்படும் இந்த உலகத் தடகளப் போட்டியில் இருவரும் மிகவும் நெருக்கமாக வந்துள்ளது கவனிக்கத்தக்கது என்கிறார் நடராஜன். அதேவேளை இந்தப் போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற பிராம்வெல், டெ கிராஸ் மற்றும் சீனாவின் பிங் டியான் சூ ஆகியோரும் இந்த இருவருக்கும் கடும் சவாலை கொடுக்கக் கூடியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.
