ரங்கநாதர் ஆலயச் சிற்பங்கள் 'சேதமடைந்துள்ளது' ஏன்?
Share
Subscribe
தமிழகத்தின் முன்னணி திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் சில பழங்காலச் சிற்பங்களும் ஓவியங்களும் சேதமடைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்வுக்கான புனரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது, பல இடங்களில் புராதனக் கலைப் பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சுதை வேலைப்பாடுடன் கூடிய சிலைகள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக தொல்லியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். செங்கல் மீது சுண்ணாம்பு பூசி உருவாக்கப்படும் சுதை சிற்பங்களை சீரமைக்கும்போது சிமெண்ட் பூசப்பட்டு, இரசாயன வர்ணங்கள் பூசப்பட்டதால் அவற்றின் மூலத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என இந்திய தொல்லியில் துறையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி டாக்டர். சத்தியமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் மட்டுமன்றி தமிழகத்தில் தொன்மை வாய்ந்த பல ஆலயங்களிலும் இதே நிலை உள்ளது என்பது கசப்பான உண்மை என்மை எனவும் அவர் கூறுகிறார். பண்டைக்கால ஆலயங்கள் புனரமைக்கப்படும்போது முறையான திட்டமிடல் இல்லாததே கலைப் படைப்புகள் அழிந்து போவதற்கு முக்கியக் காரணம் எனவும் டாக்டர். சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதேவேளை ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி ஆலயம் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.
