'இசைக்குயிலின்' நூறாவது பிறந்தநாள்

Sep 16, 2015, 06:03 PM

Subscribe

எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் இசை ஆளுமை: ஒரு பார்வை

இந்தியாவின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் நூறாவது பிறந்த தினம் இன்று(செப்டம்பர் 16) அனுசரிக்கப்படுகிறது. மறைந்த எம் எஸ் அவர்கள் ஒரு சிறந்த பாடகி என்பதற்கு அப்பால், மிகவும் மனித நேயம் மற்றும் ஆழமான இந்தியப் பண்பாடுகளைக் கொண்ட ஒருவர் என அவரது சுயசரிதையை எழுதியவரும், அவருடன் இணைந்து பல ஆண்டுகள் பாடியுள்ளவருமான டாக்டர் கௌரி ராம்நாராயண் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். பல மொழிகளை உரிய ஆசிரியர்களைக் கொண்டு முறையாக அவர் பயின்றார் என்றும், இசையை அவர் மிகுந்த பக்தியுடன் நேசித்தார் என்றும் கூறுகிறார் கௌரி ராம்நாராயண். சமூகத்தில் எப்படி ஒருவர் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார் என்கிறார் கௌரி. ஐ நா சபையில் பாடினாலும், அவரது பூஜை அறையில் பாடினாலும் ஒரே மாதிரியான அணுகுமுறையையே கையாண்டார் எனவும் அவர் கூறுகிறார். மிகவும் சிறந்த ஒரு குடும்பத் தலைவியாகத் திகழ்ந்த அவர், அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறும் கௌரி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ‘தான்’ என்ற எண்ணமே இல்லாத ஒரு கலைஞராகவும் திகழ்ந்தார் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் கௌரி ராம்நாராயண்