“உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படவேண்டும்”
Share
Subscribe
தமிழ்நாட்டின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நேரடி ஒளிபரப்பு செய்த சென்னை உயர்நீதிமன்றம் மற்ற வழக்குகளிலும் இதே நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்கிறார் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணை ஒன்று தமிழக தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒரு வழக்கின் விசாரணை இப்படி ஒளிபரப்பப்படுவது இதுவே முதல்முறையாகும். தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பாக உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். தலைக்கவசங்களை சாலையில் போட்டு உடைத்தனர். இதையடுத்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தர்மராஜா மற்றும் ஏ.கே. ராமசாமி ஆகிய இருவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறையில் புகுந்து கோஷங்களை எழுப்பினர். மீண்டும் அம்மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, நீதிமன்ற அறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. அந்தத் திரைகளில் தெரிந்த காட்சிகளை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான செய்தித் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்புச் செய்தன. இந்த வழக்குக்குச் சம்பந்தமில்லாத வழக்கறிஞர்களும் பொதுமக்களும் நீதிமன்ற அறையில் நுழைவதைத் தடுக்கும் விதமாக இந்த ஏற்பாட்டை சென்னை உயர்நீதிமன்றம் செய்திருந்தது. புதன்கிழமையன்று மதியம் இந்திய நேரப்படி 2.30 மணியளவில் நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி. செல்வம் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது. இந்த வழக்கு தற்போது செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கை ஒலிப்பதிவு செய்வதோ, ஒளிப்பதிவு செய்வதோ நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுகிறது.
