அக்டோபர் 7, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (07-10-2015) பிபிசியின் தமிழோசையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் மீது 4 இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்ட கூட்டுப்பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில் 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது குறித்த செய்தி; இது குறித்து பெண்கள் அமைப்புக்களின் கருத்துக்கள்;
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அரசு நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது குறித்த செய்தி;
இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக உடமைகளை சேதம்செய்ததான குற்றச்சாட்டில் 13 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது குறித்த செய்தி;
பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே அதிக அளவிலான வெளிநாட்டவர் குடியேற்றம் பிரிட்டனின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடும் என்று நேற்று எச்சரித்திருப்பதோடு, போரை காரணம் காட்டி பிரிட்டனுக்குள் அகதித்தஞ்சம் கோரியவர்கள், போர்ச் சூழல் முடிந்த பிறகு அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பதை பிரிட்டனில் இருக்கும் குடியேறிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து லண்டனில் இருக்கும் ஈழத்தமிழ் ஊடகவியலாளர் டி ஜெயபாலனின் செவ்வி; பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித்தலைவரும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த ஊழல் வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்த செய்தி;
தமிழ்நாட்டின் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமிமுன் அன்சாரி நீக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார். சென்னை தாம்பரத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் அவர் இந்த அறிவிப்பைச் செய்திருந்தது குறித்து தமிமுன் அன்சாரியின் செவ்வி;
ஆஃப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் தங்களது மருத்துவமனை மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது குறித்து ஜெனீவா உடன்படிக்கையின்படி சர்வதேச உண்மை அறியும் ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவத் தொண்டு நிறுவனமான எம்எஸ்எஃப் கோரியுள்ளது குறித்த செய்தி;
அமெரிக்க உளவு நிறுவனங்கள் மக்களை வேவுபார்ப்பதாக, அதற்காக முன்பு பணியாற்றிய, எட்வர்ட் ஸ்னோடன் தகவல்களை கசியவிட்டதன் பின் விளைவாக அவர் தற்போது ரஷ்யாவில் பதுங்கி வாழ்கிறார். தற்போது ஸ்னோடன் பிபிசிக்கு வழங்கிய ஒரு சிறப்புப் பேட்டியில், ஐக்கிய ராஜ்ஜியமும் மக்களை கண்காணிப்பதாகவும், ஒருவரின் திறன்பேசியிலுள்ள எந்த ஒரு தரவையும், கைத்தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டப்போதும் அரசாங்கத்தால் எடுக்க முடியும் என்று கூறினார். பிபிசி பனோரமா நிகழ்ச்சிக்கு ஸ்னோடன் வழங்கிய பேட்டியில் இருந்து சில பகுதிகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
