அக்டோபர் 17, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (17-102015) பிபிசி தமிழோசையில்
இலங்கை சிறைகளில் இருக்கும் தமிழ்க்கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டதாகக் கூறும் சம்பந்தரின் செவ்வி;
இலங்கை வடக்கே கண்டெடுக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகள் பெண்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவது குறித்த செய்திகள்;
யாழ்ப்பாணத்தில் பெரிய வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாக வெட்டி எடுத்துச் செல்ல முயன்றதாக 7 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
கடந்த ஆறு ஆண்டுகால இடைவெளியில் இந்தியாவின் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டுமடங்கு பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகரித்திருப்பதாக இந்திய அரசின் விவசாயத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக வெளியான செய்தி மீது மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்பது குறித்து தமக்கு விளக்கம் அளிக்குமாறு கோரி விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறித்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி முருகேசனின் செவ்வி;
இங்கே பிரிட்டனில் 48 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஒரு பெண்ணைத் தொடர்புகொண்ட இந்நாட்டின் உள்துறை அமைச்சகம், அவர் சட்டவிரோத குடியேறி என்றும் அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்த பிபிசியின் செய்தி;
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் 2012-ம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் வெடித்த போது, ஆயுதக்குழுக்களின் படையில் சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறார்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ள பின்னணியில் அந்த சிறார்களை சந்தித்த பிபிசி செய்தியாளரின் செய்திக் குறிப்பு;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.