மறைந்துவரும் மங்கல இசை: சிறப்புத் தொடர் ஐந்தாம் பகுதி
Share
Subscribe
தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மங்கல இசையின் சிறப்புமிக்க ஒரு பரிமாணம் மல்லாரி இசை.
வேறு எந்த வாத்தியம் அல்லது இசை அமைப்பிலும் மல்லாரி இசைக்கப்படுவதில்லை.
மல்லாரி இசை என்பது சாகித்தியம் இல்லாத சங்கீதம் என்று பொதுவாக அறியப்படுகிறது. ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் பெரிய அளவிலும், இதர நாட்களில் இறைவன் திருவீதி உலா வரும் காலங்களிலும், வகுக்கப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் இசைக்கப்படுவதே மல்லாரி மரபு என இசை அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அவ்வகையில் ஆலயத்திலிருந்து இறைவன் திருவீதி உலா நடைபெறும்போது பின்பற்ற வேண்டிய சில மரபுகளும் நியமங்களும் இருந்தன. அவை மல்லாரிக்கும் பொருந்தும் என்கிறார் இசை அறிஞரும் ஆய்வாளருமான பி எம் சுந்தரம்.
நாகஸ்வரத்தில் மட்டுமே வாசிக்கப்படும் மல்லாரி இசைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது லயம் எனும் தாளக் கணக்குகள் என இசை நூல்கள் கூறுகின்றன.
அதன் வாசிப்புக்கென்று தனி இலக்கணமும் உள்ளது என்கிறார் மதுரையிலுள்ள தமிழிசை வல்லுநரும் ஆர்வலருமான நா மம்மது.
மல்லாரி வாசிப்பில் கற்பனைக்கு பெருமளவுக்கு இடமிருந்தாலும் அதே அளவுக்கு சவால்களும் உள்ளன. அதுவே ஒவ்வொரு வித்துவான்களின் வாசிப்பையும் தனிமைப்படுத்தி காட்ட வழி செய்தது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் மல்லாரி வாசிப்பு மற்றும் அதன் பாரம்பரியம் தொடர்பில் சிதம்பரம் நகருக்கும் அங்குள்ள நடராஜர் ஆலயத்துக்கும் முக்கியப் பங்கு இருந்துள்ளது என பல இசை வல்லுநர்கள் கூறுவார்கள்.
மல்லாரி இசையும் காலவோட்டத்தில் சில மாறுதல்களைக் கண்டுள்ளது என்கிறார் நாகஸ்வர கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கம்.
சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இச்சிறப்புத் தொடரின் இப்பகுதியில் மல்லாரி இசையின் சிறப்புகள் குறித்து கேட்கலாம்.