'இளங்கோவன் காங்கிரஸை பலப்படுத்தினார், எதிர்ப்பவர்கள் ஒன்றும் செய்யவில்லை'-
Share
Subscribe
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பதவி நீக்கம் செய்யக்கோரி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி. தங்கபாலு உட்பட பல காங்கிரஸ் பிரமுகர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தனர்.
பிபிசி தமிழோசைக்கு திங்கட்கிழமை பேட்டியளித்த கே.வி.தங்கபாலு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இடது சாரி பாடகர் கோவன் கைது விஷயத்தில், காங்கிரஸ் தலைமை மீது அவர் வைத்ததாகக் கூறப்படும் தரக்குறைவான விமர்சனங்களையும் மீறி, அவர் கைது விஷயத்தில், அவருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறியிருந்தார்.
இளங்கோவன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் கோபண்ணா பிபிசி தமிழோசைக்கு இன்று தெரிவித்த கருத்துக்களில், இளங்கோவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் கட்சியை பலப்படுத்தியிருக்கிறார் என்றும், இதை காங்கிரஸ் தலைமை நன்கு உணர்ந்திருக்கிறது என்றும் கூறினார்.
கோவன் விஷயம் பற்றி குறிப்பிட்ட கோபண்ணா, கோவன் மதுவிலக்கு விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறார், அவர் மீது தேசத்துரோக சட்டத்தைப் பிரயோகித்து அவரைக் கைது செய்தது தவறு என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் எடுத்தது சரியான நிலைப்பாடுதான், இதனால் மட்டும் கோவன் காங்கிரஸ் மீது வைத்த விமர்சனங்களை அங்கீகரிப்பது என்றாகிவிடாது என்றார்.
