மறைந்து வரும் மங்கல இசை: சிறப்புத் தொடர் 10ஆம் பகுதி
Share
Subscribe
மங்கல இசை மட்டுமல்ல, தென்னகத்து இசைக்கு இஸ்லாமிய சமூகத்தினரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இருந்துள்ளது.
அது வாய்ப்பாட்டாக இருந்தாலும் சரி, அல்லது வாத்தியக் கச்சேரியாக இருந்தாலும் சரி, அதில் இஸ்லாமியர்கள் தமது ஆளுமையை பதித்துள்ளனர்.
இதற்கு பலரை உதாரணங்களாகக் காட்ட முடியும். மங்கல இசையிலும் பல கலைஞர்கள் மிகச்சிறந்த வகையில் பரிமளித்துள்ளனர்.
ஷேக் பெத்தமௌலா சாஹிப், ஆதம் சாஹிப், ஷேக் சின்ன மௌலா சாஹிப், ஷேக் மஹ்பூப் சுபானி, காலிஷா பீ, காசிம்-பாபு சகோதாரர்கள் போன்றோர்கள் அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
மங்கல இசை என்பதற்கு அப்பாற்பட்டு, ப்ரந்துபட்ட அளவில் தென்னக இசைக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இருந்துள்ளது என்கிறார் தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான நா மம்மது.
ஹார்மோனியம் காதர் பாட்சா, ஷேக் ஆதம் சாஹிப் போன்றோர்கள் இந்துக் கடவுகளைப் போற்றும் வகையிலான பாடல்களை பாடியும் இசை சொற்பொழிவுகளையும் நடத்தியுள்ளனர் என்கிறார் தஞ்சையிலுள்ள இசை ஆர்வலரும், ஆய்வாளருமான நாகராஜன் சிவராமகிருஷ்ணன்.
கர்நாடக இசை உலகில் மிகவும் அறியப்படும் சதாசிவ பிரும்மேந்திரரிடம் இரண்டு இஸ்லாமிய மாணவர்கள் பயன்றனர் எனப்தற்கான சான்றுகளும் உள்ளன எனவும் அவர் கூறுகிறார்.
இன்றும் பல மூத்த தலைமுறையினர் ஹார்மோனியம் காதர் பாட்சாவை நன்கு நினைவுகூறுகின்றனர். தமிழகத்தில் நாடகங்கள் பிரபலமாகவும் ஆளுமையும் செலுத்துவந்த காலகட்டத்தில், ஹார்மோனியத்துடன் அவர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் பிரபலமாகவுள்ளன.
இந்திய விடுதலைப் போராட்டகாலத்தில் காதர் பாட்சா அவர்களின் கச்சேரிகளுக்கு ஆங்கிலேய அரசு தடைவித்து அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அங்கும் அவர் பாடுவதையும், ஹார்மோனியம் வாசிப்பதையும் நிறுத்தவில்லை என்பதை சிறைக் குறிப்புகள் காட்டுகின்றன. எனினும் மங்கல இசைக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு என்று வரும்போது மிகவும் உச்சத்தை தொட்டவர் என அறியப்படுபவர் ஷேக் சின்ன மௌலா சாஹிப்.
தஞ்சாவூர் பாணி வாசிப்பால் கவரப்பட்டே ஷேக் சின்ன மௌலா, தமிழகம் வந்து இசை பயின்றார் என்றும், அவரது இசை அனைவரையும் கட்டிப்போடும் வகையில் இருந்தது என பிபிசி தமிழோசையிடம் கூறினார் அவரது குருவான நாச்சியார்கோவில் துரைக்கண்ணு பிள்ளையின் மகன் ரவி.
அசாத்தியமான சாதகமும் உழைப்பும் இருந்தால், உலக அளவில் ஏற்றம் பெற முடியும் எனபதற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார் ஷேக் சின்ன மௌலா சாஹிப் எனவும் கூறுகிறார் ரவி.
மங்கல இசைக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரில் இப்பகுதியிலும் அடுத்த பகுதியிலும் கேட்கலாம்.
