சென்னை வெள்ளம்: “துப்புரவுத் தொழிலாளரின் தினக்கூலி 50 ரூபாய்”

Dec 13, 2015, 04:44 PM

Episode image

சென்னை வெள்ளத்தால் நகரெங்கும் கொட்டிக்கிடக்கும் பெரும் குப்பை, சேறு மற்றும் சகதியை அகற்றும் பணி மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவசரகதியில் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் நிலைமை குறித்தும், அவர்களுக்குத் தேவையான தற்காகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமை மற்றும் அவர்கள் தங்குவதற்கான அடிப்படை வசதிகள் செய்யப்படாமை குறித்தும் கடும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

தமிழக அரசால் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட ஈரோடு துப்புரவுத் தொழிலாளி பழனிச்சாமியின் அகால மரணம் இந்த கவலைகளையும் விமர்சனங்களையும் மேலும் அதிகரித்திருப்பதோடு துப்புரவுத் தொழிலாளர்களின் பணிச்சுமை குறித்த விவாதத்தையும் மீண்டும் துவக்கியிருக்கிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்ட துப்புரவுத்தொழிலாளர்கள் பலர் லாரியில் கும்பல் கும்பலாக அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான முறையான தங்குமிடங்கள் கூட சென்னையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் ஆர். அதியமான்.

அவர்களில் ஒரு குழுவினர் 400 பேருக்கு இரண்டு கழிவறைகள் இருக்கும் இடத்தில் தங்கவைக்கப்பட்டதாகவும் அவர்கள் படுத்து உறங்க எந்த வசதியும் இல்லாமல் வெறும் செய்தித்தாள்களின்மேல் படுத்து உறங்கியதாகவும் அவர் புகார் கூறினார்.

துப்புரவுத்தொழிலாளர்களும் அடிப்படையில் தமிழக அரசுப்பணியாளர்கள் என்றாலும் அவர்கள் மற்ற அரசுப்பணியாளர்களைப் போல அரசாலோ, சக அரசுப்பணியாளர்களாலோ பொதுமக்களாலோ நடத்தப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பெரும்பாலும் அருந்ததியர்கள் மட்டுமே துப்புரவுத் தொழிலாளர்களாக பணியில் அமர்த்தப்படுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என்று கூறும் அதியமான், சென்னை வெள்ளத்தினால் மலைபோல் குவிந்திருக்கும் கழிவுகளை அகற்றுவதற்கு இயந்திரங்களை மேலதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

துப்புரவுத்தொழில் என்பது அருந்ததியர்கள் மட்டுமே செய்யும் வேலை என்கிற நிலைமை மாறவேண்டும் என்றும் துப்புரவுத் தொழில் முழுக்க முழுக்க இயந்திரமயமாக்கப்படவேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட முடியும் நாட்டில், கோவிலின் அன்றாட நிகழ்வுகள் கூட இயந்திரமயமாகும் ஒரு மாநிலத்தில், கழிவகற்றும் பணியை இன்னமும் மனிதர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றிருக்கும் நிலைமைக்கு அரசுகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீடிக்கும் ஜாதிய மனோபாவமே காரணம் என்றும், இது மாறவேண்டும் என்றும் அதியமான் கூறினார்.