மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் 13ஆம் பகுதி

Dec 20, 2015, 05:47 PM

Subscribe

தமிழர்களின் வாழ்க்கை மற்றும் நாகரீகத்தில் இன்றியமையாத தனித்துவமான பங்கை வகித்து வந்த நாகஸ்வர-தவில் இசை, பல தசாப்தங்களாகவே தனது பொலிவை இழந்து வருவது வேதனையான ஒரு விஷயமாகும். மங்கல இசை மரபை போற்றி வளர்த்து பாதுகாத்த இசை வேளாளர் சமூகமே அதன் பலம் மற்றும் பலவீனமாக இருந்துள்ளன என இசை அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். நாகஸ்வரம்-தவில் இசை ஆலயங்களை ஒட்டியே வளர்ந்துவந்த நிலையில், ஆலயங்களின் ஆதரவு படிப்படியாகக் குறைந்ததே, இந்தக் கலையின் பின்னடைவுக்கு முக்கியமான காரணம் எனக் கூறுகிறார் என இசை ஆய்வாளரும், அறிஞருமான பி எம் சுந்தரம். கடந்த பல தசாப்தங்களில் மிகவும் பிரபலமாக இன்றளவும் இருந்துவரும் வித்வான்களின் வாரிசுகள் கூட பெருமளவில் அடுத்த தலைமுறைக்கு இக்கலையை எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பது யதார்த்தம். மங்கல இசைக் கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லாததே இந்தக் கலைக்கு பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. அருங்கலைகளை பாதுகாப்பதில் அரசுக்கு முக்கியக் கடமை உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் மங்கல இசைக் கலைஞர்கள் என வரும்போது அரசுகள் பாராமுகமாகவே செயல்பட்டுள்ளன எனக் கூறி வருந்துகிறார், தஞ்சையிலுள்ள இசை ஆர்வலரும், ஆய்வாளருமான நாகராஜன் சிவராமகிருஷ்ணன். மங்கல இசையின் காவலர்களாக இருந்து வரும் இசை வேளாளர் சமூகத்தில் கல்வி குறைவாக உள்ளது மிகப் பெரும் நெருடலாகவுள்ளது. தமிழக அரசு பல இசைக் கல்லூரிகளை நிறுவி இந்தக் கலைக்கு ஏற்றம் கொடுக்க முன்வந்தாலும், அது பலனளித்துள்ளதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. தமிழகத்தில் நாகஸ்வரம்-தவில் இசைக்கான ஆதரவு ஏன் குறைந்தது, எப்போதிலிருந்து குறைய ஆரம்பித்தது போன்றவை சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரின் இப்பகுதி ஆராய்கிறது.