மனிதவள மேம்பாடு: முதலிடத்தில் இருப்பது கேரளாவா? தமிழ்நாடா?

Dec 21, 2015, 06:45 PM

Subscribe

மனிதவள மேம்பாடு மிக்க மாநிலம் கேரளமா? தமிழ்நாடா?

மனித வள மேம்பாடு தொடர்பான ஐநாவின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 188 நாடுகள் பட்டியலிட்டிருக்கின்றன. அந்த தரவரிசையில் இந்தியா முன்பு இருந்த இடத்தில் இருந்து ஒரு படி முன்னேறி 130ஆவது இடத்திற்கு சென்றிருக்கிறது.

அந்த அறிக்கையின் தர அளவுகோல்களின்படி இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் மனிதவள மேம்பாட்டில் கேரளா முதல் இடத்திலும் இமாச்சலப்பிரதேசம் இரண்டாம் இடத்திலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், இந்திய மாநிலங்களுக்கு இடையிலான மனிதவள மேம்பாடு பற்றி அளவிடுவதற்கும் மதிப்பிடுவதற்கும் கேரளாவை ஒரு முன் மாதிரி மாநிலமாகக் கொள்ள முடியாது என்கிறார் புதுதில்லியில் இருக்கும் தொழில்வளர்ச்சி படிப்புகளுக்கான ஆய்வுமையத்தின் துணைப்பேராசிரியர் கலையரசன்.

கேரளா என்பது அளவில் சிறிய மாநிலம் என்பது மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தின் பொருளாதாரம் என்பது முழுமையான சுயசார்பு பொருளாதாரம் அல்ல என்கிறார் கலையரசன். கேரளத்துக்கு வெளியில் இருந்து, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பணமே அந்த மாநிலத்தின் முக்கிய நிதியாதாரமாக இருப்பதால் கேரளா என்பது மற்ற இந்திய மாநிலங்களுக்கான உண்மையான ஒப்பீட்டுக்கான முன்மாதிரி மாநிலமாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

இந்திய மாநிலங்களின் மனித வள மேம்பாடு குறித்து உண்மையான ஒப்பீடு செய்யப்பட வேண்டுமானால் தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, குஜராத் போன்ற அளவில் பெரியவையும், தொழில் வளர்ச்சி மிக்கவையும், சுயசார்புப் பொருளாதார வளமும் கொண்ட மாநிலங்களை ஒப்பிடுவதே சரியான வழிமுறை என்றும் கலையரசன் வாதிட்டார்.

அப்படியான ஒப்பீடு செய்யும்போது இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மனித வள மேம்பாட்டில் முதல் இடத்தில் இருப்பதாக கூறுகிறார் கலையரசன்.

மேலும் இந்திய மாநிலங்களில் சுயசார்பு பொருளாதாரக் கொள்கையுடன் கூடிய மனித மனித வள மேம்பாட்டுக்கான முன்மாதிரி மாநிலமாகவும் தமிழ்நாடே திகழ்வதாக வாதாடும் கலையரசன், அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகிய இரண்டு முக்கிய மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளுமே குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராவை விட மேம்பட்டிருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டை ஒத்த இந்திய மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் ஆகியவற்றில் தொழில்வளர்ச்சியில் மேலதிக கவனம் செலுத்தப்பட்டதே தவிர, அந்த மாநில மக்களின் மனித வள மேம்பாட்டில் உரிய அக்கறை செலுத்தப்படவில்லை என்று கூறும் கலையரசன், தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு முக்கிய காரணம் இந்த மாநிலத்தை கடந்த 48 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் திராவிட அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் சமூகநலன் சார்ந்த திட்டங்களே என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலையரசன் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.