மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் 14ஆம் பகுதி
Share
Subscribe
தமிழ் மக்களின் சமூக, சமய கலாச்சார வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த மங்கல இசை தனது தனித்துவத்தையும், அந்தஸ்தையும் இழந்து வருவது பலதரப்பில் கவலையுடன் நோக்கப்பட்டாலும், தீர்வு குறித்து இதுவரை தெளிவானதொரு திட்டம் முன்வைக்கப்பட்டதாகத தெரியவில்லை.
ஆலயங்களிடமிருந்து மங்கல இசைக்கான ஆதரவு சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்த சூழலில், நாகஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் தமது வாழ்க்கை முன்னெடுத்துச் செல்ல சமய சமூக நிகழ்ச்சிகளின் பக்கம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது எனக் கூறுகிறார் இசை அறிஞரும் ஆய்வாளருமான பி எம் சுந்தரம்.
தமிழகத்தின் ஆலயங்களில் திரையிசை நுழைய ஆரம்பித்தது மங்கல இசை மேலும் பின்னடைவைச் சந்திக்க வழி ஏற்படுத்தியது என்பதும் யதார்த்தமான உண்மை.
என்றைக்கு தமிழ் திரையுலகை நோக்கிய ஒரு ஈர்ப்பு ஆலயங்களிலும் நுழைந்ததோ அன்றே நாகஸ்வரமும் தவிலும் ஆலயங்களிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது எனக் கூறுகிறார் செய்தியாளரும், நாகஸ்வர இசை குறித்து தொடர்ந்து எழுதிவருபவருமான பகவதி கோலப்பன்
இந்தக் கலை குறித்த அக்கறை தமக்கு உள்ளது என தொடர்ந்து கூறிவரும் தமிழக அரசு, மாநிலத்தில் பல பகுதிகளில் இருபதுக்கும் அதிகமான இசைப்பள்ளிகளை நிறுவி அங்கு நாகஸ்வரம்-தவில் உட்பட இசை பயிலும் மாணவர்களுக்கு பல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
அதேபோல் சென்னையில், முன்னர் அரசு இசைக் கல்லூரி எனும் பெயரில் இயங்கிவந்த நிறுவனம் இப்போது தமிழ்நாடு இசை பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அரசு இசைக் கல்லூரியில் நாகஸ்வரம்-தவில் இசையை பயில வரும் மாணவர்களுக்கான அடிப்படை தகுதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று, தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் 'வீணை' காயத்திரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆனால் அப்பல்கலைகழகத்தில் பெண்களுக்கு மட்டுமே தங்கிப் படிக்கும் விடுதியுள்ளது. இதனால் ஆண் மாணவர்கள், அதிலும் குறிப்பாக நாகஸ்வரம் தவில் வாசிப்பவர்கள் வெளியே வாடகைக்கு வீடு எடுத்து தங்கிப் படிக்கும் சூழல் உள்ளது. அதற்கு பல மாணவர்களுக்கு பொருளாதார வசதி இடம்கொடுக்கவில்லை.
தமிழ் சமூகத்தின் மீது தொலைகாட்சி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், நாகஸ்வரம்-தவிலைத் தவிர இதர வாத்தியங்களை ஆதரிக்கும் கலாச்சாரம் ஆகியவை மங்கல இசைக் கலைக்கு பின்னடவு ஏற்பட மிக முக்கியமான காரணங்கள் எனக் கூறி வருந்துகிறார் கடந்த 60 ஆண்டுகளாக நாகஸ்வர இசையைக் கேட்டு விமர்சித்து வரும் ராமசுப்ரமணியம்
ஆலயங்களின் ஆதரவு குறைந்து, நிலவுடமைகள் தகர்ந்து, ஜமீந்தார் முறை ஒழிந்து, ரசிர்களின் ஆதரவு மங்கி, பாரம்பரிய இசை வேளாளர் சமூகமே இந்தக் கலையை முன்னெடுக்க தயக்கம் காட்டும் சூழலில் மங்கல இசைக்கு எதிர்காலம் என ஒன்று உள்ளதா என்பதுதான் மங்கல இசைக் கலைஞர்கள், ரசிகர்கள், ஆர்வர்லர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் மத்தியில் உள்ளன.
மங்கல இசைக்கான ஆதரவு குறைந்ததற்கான மேலும் பல காரணங்கள், இசைப் பல்கலைக்கழகம் எடுத்துவரும் முயற்சிகள் ஆகிவற்றை உள்ளடக்கி சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரின் இப்பகுதியில் கேட்கலாம்.
