மோடி அறிவித்த தலித் தொழில் முனைவோர் முன்னேற்ற திட்டங்கள் சாத்தியமா?

Dec 29, 2015, 05:51 PM

Subscribe

தலித் தொழில் முனைவோரின் தொழில் முதலீடுகளுக்காக இந்திய அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

இந்திய தொழில் நிதிக்கழகம் மூலமாக வழங்கப்படும் இந்த நிதி, இதுவரை தலித் தொழில்முனைவோரின் 28 வர்த்தகத் திட்டங்களுக்கான 144 கோடி முதலீட்டுக் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

தவிர தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறு தொழில் முனைவோருக்கு என்று தனித்தனியாக 50,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிதியாதாரமற்றவர்களுக்கு நிதி வழங்க ஏற்பாடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட முத்ரா வங்கிகள் மூலமாக இந்தக் கடன் தொகை வழங்கப்பட்டதாகவும், 80,000 கடனாளிகள் இதன் மூலமாக பயனடைந்து, 14 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளதாகவும் அப்போது மோடி கூறினார்.

தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, தலித் தொழில் முனைவோருக்கான தேசிய மாநாட்டை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்கிழமை துவக்கி வைத்தார்.

புதுடில்லி விக்யான் பவனில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய மோடி, இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டதலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கழகத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, நரேந்திர மோடியிடம் தங்கள் அமைப்பு வைத்த கோரிக்கைகளில் 90 சதவீதத்தை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தான் தலித் தொழில் முனைவோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகம் என்கிற நிலையில், மோடியின் இன்றைய அறிவிப்புகளால் தமிழ்நாட்டின் தலித் தொழில் முனைவோருக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்றும், நூற்றுக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான பேட்டியை நீங்கள் இங்கே கேட்கலாம்.