"அதிமுக-பாஜக மற்றும் திமுக-தேமுதிக கூட்டணிகள் உருவாகலாம்"
Share
Subscribe
இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஒருபக்கமும், திமுக தேமுதிக கூட்டணி மறுபக்கமுமாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தமிழக அரசியல் விமர்சகர் ஆர் முத்துக்குமார்.
இவை தவிர மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும் பாமக தனியாகவோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி அமைத்தும் போட்டியிடக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணியில் இடதுசாரிகள் மட்டும் உறுதியாக இருப்பார்கள் என்று கூறும் முத்துக்குமார், வைகோவின் மதிமுகவும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அந்த கூட்டணியில் நீடிப்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.
கண்ணுக்கெட்டியதூரம் வரை அஇஅதிமுகவுக்கு எதிரிகளே தென்படவில்லை என்று கூறிவந்த அந்தக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெ ஜெயலலிதா நேற்று வியாழக்கிழமை நடந்த கட்சியின் பொதுக்குழுவில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி வியூகம் வகுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றதை சுட்டிக்காட்டும் முத்துக்குமார், சமீபத்திய சென்னை பெருவெள்ளத்தைத் தொடர்ந்து அதிமுக அரசு மீது பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் கடுமையான அதிருப்தியை சமாளிக்க வேண்டுமானால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதற்கு கூட்டணி தேவை என்று ஜெயலலிதா நினைப்பதையே அவரது பொதுக்கூட்ட பேச்சு குறிப்புணர்த்துவதாக தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பது என்று அதிமுக முயலும்போது பாஜகவே அதன் முதன்மைத் தேர்வாக இருக்கும் என்கிறார் அவர். 1998 ஆம் ஆண்டு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் ஏற்பட்ட தேர்தல் கூட்டணியும் பரஸ்பர புரிந்துணர்வும் அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இன்றுவரை தொடருவதாகவே முத்துக்குமார் கூறுகிறார்.
இடையில் சில சமயம் அதிமுக பாஜகவுக்கு இடையில் கடுமையான அரசியல் முரண்கள் ஏற்பட்டிருந்தாலும் இருகட்சிகளும் கொள்கையளவில் இயல்பான, இயற்கையான கூட்டணிக் கட்சிகளாகவே நீடித்து வருவதாகவும் அந்த கட்சிகளுக்கும், அவற்றின் தலைமைகளுக்கும் இடையிலான நட்பும், பரஸ்பர புரிந்துணர்வும் எந்த சூழ்நிலையிலும் தொடருவதாகவுமே கூறுகிறார் முத்துக்குமார்.
அதுவும் தவிர ஜெயலலிதாவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நிலவும் தனிப்பட்ட நட்பும் அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையிலான கூட்டணி அமைவதற்கான சூழலை அதிகப்படுத்தும் என்றும் முத்துக்குமார் தெரிவித்தார்.
திமுக இந்த தேர்தலில் கூட்டணி அமைத்தே தீரவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக தெரிவிக்கும் முத்துக்குமார், தேமுதிகவையும் காங்கிரஸ் கட்சியையும் தன் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.
தேமுதிகவைப் பொறுத்தவரை அந்த கட்சி 2006 தேர்தலில் தனித்து நின்றபோது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே பெற்றதையும், 2014 ஆம் ஆண்டு மூன்றாவது அணி அமைத்து அந்த அணியில் அதிக இடங்களில் தேமுதிதிக போட்டியிட்டபோது அந்த கட்சி ஒரே ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் முத்துக்குமார், இதற்கு மாறாக 2011 ஆம் ஆண்டு அதிமுக என்கிற பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்தபோது மட்டுமே தேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த மூன்று தேர்தல் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தேமுதிகவுக்கு இந்த தேர்தலில் திமுகவைப் போன்ற ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே அரசியல் ரீதியில் பலன்கொடுக்கும் தேர்வாக இருக்கும் என்று கூறும் முத்துக்குமார், திமுகவும் தேமுதிகவை தன் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு தீவிரமாக முயல்வதால் திமுக தேமுதிக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் தெரிவித்தார்.
பாமகவைப் பொறுத்தவரை அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதால் அது தனியாகவே போட்டியிடும் என்றும் ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணி உருவாகாமல் போகும்பட்சத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அதற்கு இருப்பதாகவும் கூறும் முத்துக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பிடிக்காத சூழலில் மனிதநேய மக்கள் கட்சியும் ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என்றும் தெரிவித்தார்.
